பிரதமர் நரேந்திர மோடி 2021 ஏப்ரல் 6 அன்று கோயம்புத்தூரில் ஒரு எச்சரிக்கை விடுத்தார். “திமுகவை ஆட்சியில் அமர வைத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரவுடி ராஜ்ஜியம் நடக்கும்” என்பது அந்த எச்சரிக்கை. அதை அப்படியே ஐந்து ஆண்டுகள் அனுபவித்த பின் இப்போது தமிழக மக்கள், திமுக இல்லாத அரசு அமைய பாதை போட்டு விட்டார்கள். அதற்காக தமிழக வாக்காளர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்வோம்.
இந்த முறை தமிழகத்தை ஆள்கிறவர் ஆட்சி பீடத்தில் இருந்து கொண்டு ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் இழி செயலை ஆதரிக்க மாட்டார் என்று நம்புவோம். அந்த இழி செயல் செய்த திமுகவின் வீழ்ச்சி, அவர் கண்முன் இருக்கட்டும். பாரதம் ஒரே நாடு என்ற உணர்வு மறுபடியும் தமிழக பொதுவெளியில் கௌரவத்துடன் தலைநிமிர்கிற விதத்தில் புதிய மாநில அரசு நடந்து கொள்ளட்டும்.
அஸ்ஸாமிலும், புதுச்சேரியிலும் பாஜக மறுபடியும் மக்களால் ஆட்சியில் அமர்த்தப்படுவது ஏன் என்பதை புதிய தமிழக அரசு யோசித்துப் பார்க்கட்டும். பாஜக செய்த நல்லாட்சி என்ற பதில் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே நல்லாட்சி ஒன்று தான் (கட்சிக்கு மட்டும் அல்ல, மாநிலத்திற்கு, ஏன் தேசத்திற்கே) நல்ல எதிர்காலம் தரும் என்பதை புதிய தமிழக அரசு மனதில் பதித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
தேசத்திற்கு நல்ல எதிர்காலம் வேண்டும் என்ற ஆர்வத்துடன் பாரத அரசு எத்தனையோ திட்டங்களை வழங்கி வருகிறது. ஒன்று விடாமல் தமிழக மக்களுக்கு பலன் தரும் விதத்தில் அவற்றை புதிய தமிழக அரசு செயல்படுத்தி, தமிழக மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் இயற்றப்பட்டு வரும் மதமாற்ற தடை சட்டம், பசுவதை தடை சட்டம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட தேசப் பாதுகாப்புக்கு உகந்த நடவடிக்கைகளை பின்பற்றி, புதிய தமிழக அரசு தேச விரோத களையெடுப்பிற்கு மனமுவந்து தோள் கொடுக்க வேண்டும்.