அதிக வாக்குப் பதிவு, ஊழலை ஒழிக்கவே

மே 4 அன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம். மே 4 அன்று தான் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிப்பும். மே 28 வரை நீடிக்கும் அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போது, பரிமாறிக் கொள்ளப்பட்ட ஊழல் புகார்களை விசாரிப்பதில், புதிய அரசு காட்டும் கடுமை அக்னி நட்சத்திரத்தை விட, அதிகமாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்குத்தான் உங்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கிறோம் என்று மக்கள் உணர்த்திவிட்டார்கள். மாநிலத்தில் நடந்துள்ள ஊழல்களின் அளவை பிரதமரே கணக்கிட்டு, அது லட்சம் கோடிகளைத் தாண்டும் என்று சொன்னார். அந்த பிரம்மாண்டத்தை எந்த அரசும் கண்டுகொள்ளாமல் விட முடியாது.
ஏப்ரல் மாத தேர்தலில் வரலாறு காணாத அளவில் 84 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஊழலின் பிரம்மாண்டத்தால் அதிர்ந்து போன வாக்காளர்கள் தங்கள் தீர்ப்பை வாக்குகள் மூலம் தெரிவிக்க வாக்குச்சாவடிக்கு விரைந்தார்கள் என்பதுதான் முக்கியமான காரணம். அதாவது ஊழல் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்த மக்கள் வீதிக்கு வந்தார்கள். மக்களுக்கு உள்ள இந்த மனோதிடம் அரசுக்கும் இருக்கிறதா, இல்லையா என்பதுதான் அனைவரும் அறிய விரும்பும் ரகசியம்.

 

 தேவை தேசிய அளவில் மதமாற்றத் தடை

 

ஆசை காட்டி, மிரட்டி, ஏமாற்றி மதம் மாற்றினால், அது சட்டப்படி குற்றம். எனவே பல மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் இயற்றப்பட்டு வருகிறது. “ஆசை காட்டி, மிரட்டி ஏமாற்றி” என்பதுடன் “சதி வலை பின்னி சிக்க வைத்து” என்பதையும் சேர்க்க வேண்டும். புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல கார்ப்பரேட் ஜிகாத் செய்திகள் பல பகுதிகளில் இருந்தும் வருவதால் இது அவசியமாகிறது.
இந்த விதத்தில் மதமாற்ற வலையில் சிக்க வைக்கப்படுகிறவர்கள் மதமாற்றிகளின் தேச விரோத செயல்களுக்கு வலுக்கட்டாயமாக உடந்தை ஆக்கப்படுவதால், இதற்கான தண்டனையும் பல மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல. என்.ஐ.ஏ, ஐ.பி போன்ற புலனாய்வு அமைப்புகள், இதுபோன்ற விவகாரங்களில் தானாக முன்வந்து புலனாய்வில் இறங்க வழிவகை செய்ய வேண்டும். “பல மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ள மதமாற்ற தடைச் சட்டம் காரணமாக மதமாற்றத்தை கட்டுப்படுத்துவதில் ஓரளவு வெற்றி காண முடிந்திருக்கிறது. எனவே மத்திய அரசு தாமதம் இன்றி தேசிய அளவில் கடுமையான மதமாற்ற தடை சட்டம் இயற்ற வேண்டும்” என்று விசுவ ஹிந்து பரிஷத் கோரியுள்ளது. வகுப்புக் கலவரத்தை தூண்டுவது மதமாற்றம்; எனவே அது தடை செய்யப்பட வேண்டும் என்பது வேணுகோபால் கமிஷன் பரிந்துரை. நமக்கு நல்லிணக்கம் முக்கியம்.