கல்பாக்கம் கல்பகமே

fšgh¡f« fšgfnk
கல்பாக்கம் அணு உலை, 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு 8.25 மணிக்குத் தனது முதல் ‘கிரிட்டிகாலிட்டி’ நிலையை எட்டியுள்ளது. அதாவது, இந்த அணு உலை முதல் முறையாகத் தானாகவே தொடர்ச்சியான அணுக்கரு சங்கிலி வினையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக வணிக ரீதியிலான ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டரை இயக்கும் உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையை பாரதம் பெற்றுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தும் முடியாத ஒரு காரியத்தை, பாரத விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டியுள்ளனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். நாமும் பெருமிதம் பொங்க பாராட்டுவோம்.
முதல் சாதனை, இந்த அணு மின்சக்தி தொழில்நுட்பம் பயன்படுத்தும் அணு உலை முற்றிலும் சுதேசி. அடுத்தது உலகை மாசுப்படுத்தாத மின்சார உற்பத்தி என்ற பசுமை இலக்கை அடைவதில், இந்த அணுமின் சக்தி நுட்ப சாதனை வெகுவாக கை கொடுக்கும்.
யுரேனியம் இறக்குமதி செய்து, அதை புளூட்டோனியம் ஆக்கி அணுசக்தி உற்பத்தி செய்யும் இந்த உலையில், பாரதத்திலேயே கிடைக்கும் தோரியத்தை அணுசக்தி உற்பத்தி செய்யும் மூலப் பொருளாக பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. தமிழகம், கேரளம், ஒரிசா கடற்கரையோரம் தோரியம் கணிசமாக கிடைக்கிறது. உலகின் மூன்றில் ஒரு பங்கு தோரியம் நம்மிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலுக்கு சினேகிதமான முறையில், அணுமின் உற்பத்தி செய்வது பாரதத்திற்கு புதிது அல்ல. நாட்டில் ஏற்கனவே 25 அணுமின் சக்தி ரியாக்டர்கள் இயங்கி வருகின்றன; இன்னும் 11 அணுமின் ரியாக்டர்கள் நிறுவப்பட்டு வருகின்றன. சிறிய அளவிலான 5 ரியாக்டர்கள் விரைவிலேயே பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது.
தேசத்தின் மின் உற்பத்தி அளவு 520 அலகுகள். இதனுடன் ஒப்பிட்டால், தற்போது அணுமின் உற்பத்தி 9 அலகுகள் அளவு. இதை 22 அலகுகள் அளவுக்கு அதிகரிக்க, அதாவது அணுமின் உற்பத்தியை சுமார் மூன்று மடங்கு ஆக்க, பாரத அரசு முனைப்புக் காட்டி வருகிறது. அமெரிக்கா – ஈரான் போர், ரஷ்யா – உக்ரைன் போர் இவற்றில் சிக்கி அல்லல்படும் உலகம், பாரதத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை கண்டு திடுக்கிட்டு நிற்பதுதான் சுவாரஸ்யம். விரும்பியதை எல்லாம் தரும் கல்பக விருட்சம் போல கல்பாக்கம் சாதனை, இன்னும் ஒரு துறையில் உலகின் தலைமை இடத்தை பாரதம் பிடிக்க பாதை போடுகிறது என்பதுதான் உண்மை.