பணிபுரியும் இடங்களில் எல்லாம் ஷாகா ஆரம்பித்த ராமகிருஷ்ணன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் தனது தந்தையைப் போலவே சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க
கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, ராமகிருஷ்ணன் ஜியைப்
பற்றி இந்த இதழில் அறிவோம்…

 

அரங்கசுவாமி − அமிர்தவல்லி தம்பதியினருக்கு மகனாக, 1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி, சென்னையில் பிறந்தார் ராமகிருஷ்ணன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி மற்றும் இரண்டு தங்கைகள். தந்தை பிரபல வங்கியில் பணிபுரிந்தார்.
இளம் வயதில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த ராமகிருஷ்ணன் ஜி, பின்னர் நுங்கம்பாக்கம் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். அதனைத் தொடர்ந்து புரசைவாக்கத்தில் உள்ள எம்.சி.டி.எம் பள்ளியில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த பின்னர், அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்று தேர்ச்சி அடைந்தார். அதனுடன் சி.ஏ.ஐ.ஐ.பி படிப்பையும் படித்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் எழுத்தராக பணியில் சேர்ந்தார்.
தந்தை சங்கத்தில் இருந்ததால், தனது இளம் வயதிலேயே அமைந்தகரையில் நடந்த ஷாயம் ஷாகாவிற்கு சென்றார். அதன் முக்கிய சிக்ஷக்காக ஜெகன்நாதன் ஜி இருந்தார். முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை 1959 ஆம் ஆண்டு திருச்சியிலும், இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை 1960 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள பாலக்காட்டிலும், மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை 1964 ஆம் ஆண்டு நாக்பூரிலும் முடித்தார்.
1964 மே 27ல், அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் இயற்கை எய்திய போது, நாக்பூரில் மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமில் இருந்தார் ராமகிருஷ்ணன் ஜி. நேருஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மூன்று நாட்கள் ஷாரீரிக் (உடல்) பயிற்சி இல்லாமல், மனரீதியான பௌத்திக் மட்டுமே இருந்தது என நம்மிடம் தெரிவித்தார்.
1964ல், அன்றைய மாம்பலம் (பாஹ்) மாவட்டத்தின் ஆர்.எஸ்.எஸ் செயலாளராக இருந்தார். 1969ல், சங்க தொழிலாளர்களின் அமைப்பான பி.எம்.எஸ்.ஸில், சென்னை மாநகரம் செயலாளராக இருந்தார். வங்கியில் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றதும், பி.எம்.எஸ்.ஸின் அதிகாரிகள் அமைப்பிற்கு (ஆபிஸர்ஸ் யூனியன்) பொறுப்பாளராக இருந்தார்.
தமிழகத்தில் சங்க வளர்ச்சிக்கு வித்திட்டவரும், மூத்த பிரச்சாரக்குமான சிவராம் ஜி ஆரம்பித்த நல்லோர் வட்டத்திற்கு, 1976 ஆம் ஆண்டு முதல் 1980 வரை பொறுப்பாளராக இருந்தார். சமுதாயத்தில் உள்ள பல்வேறு நபர்களையும் ஒன்றிணைத்து, சங்கப்பணி செய்வதற்கு நல்லோர் வட்டம் முக்கியக் காரணியாக இருந்தது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்ததால், தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் பணி மாறுதல் இருந்தது. சத்தியமங்கலம், நாகப்பட்டினம், காவிரிபூம்பட்டினம், ஹைதராபாத், செகந்திராபாத், கீழ்பெண்ணாத்தூர் என பல ஊர்களுக்கும் பணி மாறுதல் இருந்தபோதும், செல்லும் இடங்களில் எல்லாம் ஷாகா ஆரம்பிப்பதை வழக்கமாகக் கொண்டவர், ராமகிருஷ்ணன் ஜி. புதிய நபர்களை கண்டுபிடித்து, அவர்களுடன் பேசி ஷாகாவிற்கு வரவழைத்து, செல்லும் இடங்களில் எல்லாம் சங்க வேலைக்கு முக்கியத்துவம் தருவார்.
1975ல், அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த எமர்ஜென்சியால், நமது தேசத்தில் உள்ள பலரும் அதற்கு எதிராகப் போராடினார்கள். அவர்களுள் இருவர் ராமகிருஷ்ணன் ஜியின் மனைவி லட்சுமி அம்மாள் மற்றும் அவரது தம்பி சடகோபன் ஜி. காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தபோதும், மனம் தளராது நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தனர். ராமகிருஷ்ணன் ஜியின் வீடு சங்க அலுவலகம் போல இருக்கும் எனவும், இரவோ அல்லது பகலோ என நேரம் வித்தியாசமின்றி, எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான உணவு தயார் நிலையில் இருக்கும் எனவும், ராமகிருஷ்ணன் ஜியுடன் நெருங்கிப் பழகியவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்று, அவர்களுக்குத் தேவையான உணவு சமைப்பதை, அவரது குடும்பத்தினர் வழக்கமாகக் கொண்டு இருப்பர் எனவும், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் வந்து உணவு அருந்தலாம் என்ற நம்பிக்கையில், பலரும் வருகை புரிவார்கள் என ஜியுடன் பழகியவர்கள் நம்மிடம் தெரிவித்தனர். சங்கத்தின் மூத்த பிரச்சாரக்கான சூரி ஜி, இராம கோபாலன் ஜி, சிவராம் ஜி, தனுசு ஜி என பலரும் ராமகிருஷ்ணன் ஜியின் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.
1969 ஏப்ரல் மாதம் 23ல், லட்சமி அம்மாளுடன் ராமகிருஷ்ணன் ஜிக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு பொற்கொடி, ஹேமலதா, குமுதவள்ளி என்ற மூன்று மகள்களும், மனோஜ் குமார் என்ற ஒரு மகனும் உள்ளனர். சேவிகா சமிதி அமைப்பில் பொற்கொடி இருந்துள்ளார். ஹேமலதா ஏ.பி.வி.பி.யில் இருந்துள்ளார். தற்போது நியூரோதெரபி சிகிச்சை செய்து வருகிறார். குமுதவள்ளியும் நியூரோதெரபி சிகிச்சை செய்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியின் போது குடும்ப சகிதமாக முன் நின்று, விநாயகர் ஊர்வலத்தை வெற்றிகரமாக நடத்தி வைப்பார்கள். மனோஜ் குமார் ஜி, கட்டுமானத் தொழில் செய்து வருகிறார்.
ஷாகாவிற்கு யார் வந்தாலும், வராவிட்டாலும், மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி, எந்த சூழ்நிலையிலும் ஷாகா செல்ல வேண்டும் எனவும், தனி ஒருவனாகக்கூட ஷாகாவில் இருக்க மற்ற கார்யகர்த்தர்களை பழக்கப்படுத்தி உள்ளார். சம்பர்க எப்படி செய்வது? புதியவர்களை சங்கத்தில் எப்படி இணைப்பது? என்பதை அடுத்த தலைமுறை கார்யகர்த்தர்களுக்கு கற்றுக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர்.
தற்போது வயது அதிகமாக உள்ள சூழ்நிலையிலும், பூர்ண கணவேஷில் (சங்க சீருடை), வாரந்தோறும் சாங்கிக் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள ராமகிருஷ்ணன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.