வீண்பழி சுமத்திய அமெரிக்காவுக்கு பாரத வெளியுறவுத்துறை பதிலடி!

உலகிலேயே அமெரிக்கா மட்டும்தான் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் இயங்கி வருகிறது. மற்ற நாடுகள் யாவும் மோசமாக இயங்கி வருகின்றன என்ற தவறான பிம்பத்தை கட்டமைக்க, அமெரிக்கா எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து செல்ல தயங்காது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களை பட்டியலிட முடியும். இப்போது, புதிய உதாரணம் ஒன்று இப்பட்டியலில் சேர்ந்துள்ளது.
மார்ச் மாதம் 15ம் தேதி யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் எனப்படும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் ஆண்டறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் அடுக்கடுக்காக அபத்தங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பாரத புற உளவுப் பிரிவான `ரிசர்ச் அண்டு அனலைசிஸ் விங்க்’ எனப்படும் பகுப்பாய்வு அமைப்பு குறித்தும், உலகிலேயே தலைசிறந்த தன்னார்வ தொண்டு அமைப்பாக நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இயங்கி வரும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் குறித்தும், வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அமெரிக்க நிர்வாகத்துக்கு ஒரு முக்கிய பரிந்துரையை அளித்துள்ளது. `கன்ட்ரி ஆஃப் பர்ட்டிகுலர் கன்சர்ன்’ என்ற வகைப்பாட்டின் கீழ் பாரதத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான் பிரதான பரிந்துரையாகும்.
எந்தெந்த நாடுகளில் மத சுதந்திரம் நெரிக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் இவ்வாறு முத்திரை குத்துவது அமெரிக்காவின் வழக்கமாகும். எந்த அடிப்படையில் பாரதத்தை இந்த வகைப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதை யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் தெளிவுபடுத்தவில்லை. பொதுவாக குற்றம்சாட்டியுள்ளதே தவிர, பிற நாடுகளுடன் ஒப்பிட்டு, பாரதம் எத்தகைய நிலையில் உள்ளது என்பதை இந்த அமைப்பு அலசி ஆராயவில்லை.
2025ம் ஆண்டு பாரதத்தில் மத சுதந்திரம் தாழ்ந்து விட்டது, வீழ்ந்து விட்டது என யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் விமர்சித்துள்ளது. மதச் சிறுபான்மையினரை குறிவைத்து சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மதமாற்றத் தடைச் சட்டம் இறுக்கப்பட்டுள்ளது. இது பல மாநிலங்களில் அமலாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மஹாராஷ்ட்ரா, ஒடிசா, உத்தரப்பிரதேசத்தில் சட்டரீதியான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் வக்பு தொடர்பான திருத்தச் சட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது மதச்சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிப்பதாகும்.
மத மாற்றத் தடைச் சட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளதால், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறை தண்டனை காலம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மையினர், வெளிநாடு களிலிருந்து வந்து தஞ்சம் புகுந்தவர்கள் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். இவ்வாறு யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் குற்றம் சாட்டியுள்ளதே தவிர இதில் எந்த அளவுக்கு உண்மையுள்ளது. இதை உறுதிப்படுத்த எத்தகைய ஆதாரங்கள் உள்ளன போன்ற அம்சங்களையெல்லாம் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த வீண் பழிக்கு பாரத வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அளித்துள்ள அதிரடி பதிலடி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறியதாவது: அமெரிக்க ஆணையத்தின் விஷமத்தனமான அறிக்கையை பாரதம் முற்றிலுமாக நிராகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் பாரதத்தின் புகழையும், பெருமையையும், கீர்த்தியையும் சீர்குலைக்கும் வகையில் தவறான தரவுகளை அளித்து வருகிறது. அமெரிக்காவிலும், கனடாவிலும் ஹிந்து ஆலயங்கள் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் பாரதியர்கள் தாக்கப் பட்டுள்ளார்கள்.
காலிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் கடுமையானவை. அவர்கள் பாரதியர்களை குறிவைத்து நடத்திய தாக்குதல்களையெல்லாம் அமெரிக்கா எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று அந்த நாட்டை நோக்கி கேள்வி எழுப்புகிறேன். யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் நம்பகத்தன்மையற்ற அமைப்பாகும். அது ஏற்கனவே ஒருதலைப்பட்சமாக முன் முடிவுகளை நிர்ணயம் செய்து கொண்டு அதற்கேற்ப சில நிகழ்வுகளை சேர்க்கிறது.
பாரதத்தில் மத சுதந்திரம் நெறிக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். சர்வதேச அரங்கில் பாரதத்தை தலைகுனிய வைக்கவேண்டும் என்ற விஷமத்தனமான உள்நோக்கத்தின் அடிப்படையில் இல்லாததையும், பொல்லாததையும் ஒருங்கிணைத்து அறிக்கையாக யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்புக்கு `கன்ட்ரி ஆஃப் பர்ட்டிகுலர் கன்சர்ன்’ என பாரதம் மீதும் முத்திரை குத்த வேண்டும் என பரிந்துரைக்க துளியும் அறுகதை கிடையாது. கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என்று இந்த விஷமத்தனத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாரதம் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறோம். இதற்குப் பிறகும் திருந்தாவிட்டால் பாரதத்தின் எதிர்வினை மேலும் கடுமையாகும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி