மதம் மாற்ற ஆபத்தும் சட்ட தடுப்பு நடவடிக்கைகளும்

மகாராஷ்டிராவில் கிறிஸ்துவ, இஸ்லாமிய மத மாற்றமும் நிகழ்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பழங்குடி மக்கள் வசிக்கும் துலே மற்றும் நந்தூர் மாவட்டங்களில் கிறிஸ்துவ மிஷினரிகள் ஹிந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள். ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், நாசிக் சத்ரபதி சாமாபஜிநகர், புனே, சதாரா,சாங்லி, சோலாப்பூர், புல்தான, அகோலா, யவத்மால், அமராவதி போன்ற மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மதமாற்றம் நடைபெறுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. பாரதத்தில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரும் 13 வது மாநிலம் மகாராஷ்டிரம் ஆகும்.
இந்தச் சட்டம் கொண்டு வருவதற்கு முன், 2024 நவம்பர் 26ல் வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பை குறிப்பிட்டு, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மதம் மாறிய பட்டியல் சமூக பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது என அறிவித்தார். இது மதம் மாறியவர்களுக்கு கொடுத்த முதல் அடி.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 13-ந் தேதி மகாராஷ்டிரா ‘அரசு தர்ம சுதந்திரம்‘ அல்லது ‘மத சுதந்திர மசோதா 2026‘ஐ சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. மற்ற மாநிலங்களில் உள்ள மதமாற்ற தடைச்சட்ட மசோதவிலிருந்து பல்வேறு விஷயங்களில் இந்த மசோதா மாறுபட்டுள்ளது. இந்த மசோதாவின்படி, சட்டவிரோத மதமாற்றத்திற்காக மட்டுமே திருமணம் நடத்தப்பட்டிருந்தால், நீதிமன்றம் அந்த திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க முடியும்.
திருமணத்தில் இரு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகி, மதமாற்றம் சட்டவிரோதமாக செய்யப்பட்டதாகக் கூற உரிமை உண்டு. பிரிவு 5, சட்டவிரோத மதமாற்றத்தை உள்ளடக்கிய திருமணத்திலிருந்து ஒரு குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை திருமணத்திற்கு முன்பு தாய் பின்பற்றிய மதத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் என்று கூறுகிறது.
ஒருவர் வேறு மதத்திற்கு மாற விரும்பினால், அந்த நபர்  குறைந்தபட்சம் 60 நாட்களுக்கு முன்னதாக, மாவட்ட நீதிபதி அல்லது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வேறு எந்த அதிகாரியிடமும் தனது விருப்பத்தை முன் அறிவிப்பாக தெரிவிக்க வேண்டும்.
சிறுவர்கள், பெண்கள், மனநிலை சரியில்லாதவர்கள், பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினர் போன்ற பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு எதிராக குற்றம் செய்யப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். கூட்டு மதமாற்றங்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். ஒரு அமைப்பு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அரசாங்கம் அதன் பதிவை ரத்து செய்யலாம், மேலும் பொறுப்பாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 