நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை கல்வித்துறையில் நல்ல மாற்றங்களை செய்து வரும் சிக்ஷா சம்ஸ்கிருதி உத்தான் நியாஸ் (கல்வி மேம்பாட்டு கேந்திரம்) பற்றி அறிவோம்…
காங்கிரஸ் தலைமையிலான அப்போதிருந்த மத்திய அரசு 2004 ஆம் ஆண்டு, பாலியல் கல்வியை நமது தேசத்தில் அமல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அச்சமயம் அதனை தடுத்து நிறுத்துவதற்காக, தேசம் முழுவதும் பல்வேறு இயக்கங்கள், சமூக சிந்தனையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் இணைந்து “கல்வியை காப்போம் இயக்கம்” (சிக்ஷா பச்சவோ ஆந்தோலன்) என்ற பெயரில் ஒரு தற்காலிக இயக்கத்தை நிறுவினர். மூத்த கல்வியாளர் தீனாநாத் பத்ரா தலைமையில் மூத்த கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற துணைவேந்தர்கள், நீதிபதிகள், பல்வேறு மதத் தலைவர்கள் ஒன்றாக இணைந்து பாலியல் கல்வியை அரசு அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தினார்கள்.
இஸ்லாமிய மத குருமார்கள், சீக்கிய மதத் தலைவர்கள், கிறிஸ்தவ பேராயர்கள் போன்ற சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்களும், பாலியல் கல்விக்கு எதிராக இந்த இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டனர். இந்த தொடர் போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு பாலியல் கல்வியை அமல் படுத்துவதற்கான சட்ட முன்வடிவை கைவிட்டது.
2004 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில், டெல்லி ஜே.என்.யூ (JNU) பல்கலைக்கழகத்தில் உள்ள பாடத்திட்டத்தில், விடுதலைப் போராட்ட வீரர்களை “தீவிரவாதிகள்” என எழுதப்பட்ட பாடப்புத்தகங்கள் புழக்கத்தில் இருந்தன. ஹிந்துக்களால் வணங்கப்படும் ஸ்ரீ ராமர் பற்றி அவதூறான கருத்துக்களை கொண்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இவ்வாறாக பல்கலைக்கழகத்தில், உயர்கல்வித் துறையில் பல்வேறு வரலாற்று திரிபுகள் மற்றும் பாரதத்தின் பண்பாட்டுக்கு எதிரான கருத்துக்கள் நிறைந்த பாட புத்தகங்கள், பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்பட்டு கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, 11 வழக்குகளில் இந்த அமைப்பு வெற்றி பெற்றது. இதன் விளைவாக வரலாற்று திரிபுகள் மற்றும் பண்பாட்டுக்கு எதிரான கருத்துக்கள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன.
தேசத்தில் ஒரு தீய செயலை செய்வதற்கு, சிலர் மிகச் சுலபமாக ஒன்று சேர்ந்து செயல்படுவதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் தேசத்தின் வளர்ச்சிக்காகவும், கல்வித்துறையின் மேம்பாட்டுக்காகவும், அனைவரையும் ஒருங்கிணைப்பது என்பது மிக அரிது. ஆகவே கல்வித்துறையில் நல்லதொரு மாற்றங்களை செய்வதற்காக, நிரந்தரமான அமைப்பு தேவைப்பட்டது. “கல்வியை காப்போம் இயக்கம்” என்ற பெயரில் தற்காலிகமாக செயல்பட்ட இயக்கம், 2007 ஆம் வருடம் ஜூலை 2-ம் தேதி “சிக்ஷா சம்ஸ்கிருதி உத்தான் நியாஸ்” (கல்வி மேம்பாட்டு கேந்திரம்) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது.
பாலியல் கல்வியை கூடாது என்று சொல்லும் அதே வேளையில், அதற்கு மாற்றாக பண்பாட்டுக் கல்வியும், விழுமியக் கல்வியும் (Value Education) முன் வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த இயக்கம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து “பஞ்ச கோஷ” அடிப்படையிலான கல்வி முறையை, ஆசிரியர்களுக்கு கற்பித்து வருகின்றனர். பாலியல் கல்விக்கு மாற்று விழுமியக் கல்வி என்பதை உணர்ந்து, தற்போது பல கல்வி நிறுவனங்கள் இந்த பாரதிய சிந்தனையை அமல்படுத்தி வருகின்றன.
இந்த அமைப்பு கல்வி மற்றும் கலாச்சாரத்தின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் தொண்டு நிறுவனம். தேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்ததிலும், அதற்கான அறிவுரைகளை வழங்கியதிலும், இந்த அமைப்புக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. தேசிய கல்விக் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்ட காலத்தில், நாடு முழுவதும் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தி, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து, ஓர் வரைவு புத்தகம் இந்த அமைப்பால் வெளியிடப்பட்டது.
அமைப்பின் தேசிய செயலாளர் அத்துல் கோத்தாரி அவர்கள் தொகுத்து அளித்த இந்த புத்தகம், தேசிய கல்விக் கொள்கைக்கான பல்வேறு அடிப்படைகளை முன் வைத்தது. மாணவர்களின் திறன் மேம்பாடு, கற்பிக்கும் முறை, கல்வியில் பாரதிய சிந்தனை, அறிவியல் பூர்வமான அணுகுமுறை மற்றும் இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு அம்சங்களை இந்த புத்தகம் முன்வைத்தது. 2007 முதல் தொடர்ச்சியாக பல்வேறு கல்வி நிறுவனங்களோடு இணைந்து, புரிந்துணர் ஒப்பந்தங்கள் செய்து, எண்ணற்ற பயிற்சிகளையும், கருத்தரங்குகளையும் தொடர்ந்து நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
இந்த அமைப்பின் கீழ் 15 துறைகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையும், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் உள்ள பாடத்திட்டத்துடன் தொடர்புடையது. விழுமியக் கல்வி மற்றும் வேத கணிதம் போன்ற பாடத்திட்டங்களை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளாக பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தி வருகிறது. இவ்வாறாக, தேசத்தின் கல்வியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை, தேசத்தின் முன் வழங்குவதற்காக “GYANOTSAV” என்ற மிகப்பெரிய கருத்தரங்கை கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து கல்வியாளர்கள் ஒன்றாக சங்கமித்து, தங்களது கல்வி நிறுவனங்களில் சிறப்பாக செய்து வரும் பணிகளை, GYANOTSAV கருத்தரங்கில் அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த பிரத்யேக நிகழ்ச்சி எல்லா மாநிலங்களிலும் கடந்த ஏழு ஆண்டுகளில் நடைபெற்றது. தமிழ்நாட்டில், 2020 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரியில் மாநில அளவிலான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கருத்தரங்கை அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவங்கி வைத்தார். இரண்டாவது கருத்தரங்கம் மதுரையில் உள்ள சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் கலந்து கொண்டு, தரமான கல்வியை குறித்து சிந்தனை மற்றும் விவாதம் செய்தனர்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்ற போது, திருவேணி சங்கம நதிக்கரையில், பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் கல்வி சார்ந்த அமைப்புகள் மகா கும்பத்தில் தங்களது பங்களிப்பை அளித்தனர். அச்சமயம் “ஞானகும்பம்” என்ற தலைப்பில், தொடர்ந்து 30 நாட்கள் கல்வி சார்ந்த சிந்தனைகளை முன்வைத்து தினசரி கருத்தரங்கங்களை நடத்தியது. இந்த நிகழ்வில் NIT, IIT, IIIT, மத்திய பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் நிர்வாகிகளும், ஆசிரியர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து திரளாக கலந்து கொண்டனர்.
அடுத்து வரும் 20 ஆண்டுகளில், கல்வித்துறையில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என அனைவரும் இணைந்து சிந்தனை செய்தனர். அதன் அடிப்படையில் கல்வியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, திறன் மேம்பாடு, பாரதிய சிந்தனை, பாரதிய அறிவு முறைகள், இவற்றை எவ்வாறு அமல்படுத்துவது என்று ஒரு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. கல்வித் துறையின் மாற்றம் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களில் இருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை “ஞானகும்பம்” நிகழ்ச்சி மூலம் தேசம் முழுவதற்கும் வழங்கியது.
தமிழகத்தில், 2017வது வருடம் சிக்ஷா சம்ஸ்கிருதி உத்தான் நியாஸ் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்வி மேம்பாட்டிற்காகவும், பாரதிய அறிவு முறைகளை பாடத்திட்டத்தில் இணைப்பதற்காகவும், விழுமிய கல்வியை அமல்படுத்துவதற்காகவும், வழிமுறைகளையும், உதவிகளையும் இந்த அமைப்பு நல்கி வருகிறது. தற்போது வரை 30-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இணைந்து செயல்பட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், தென்பாரத அளவிலான “ஞானகும்ப” நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி மாநில அரசும், பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆந்திரப்பிரதேரசம் மற்றும் தெலுங்கானா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆசிரியர்கள், கல்வி நிறுவன தாளாளர்கள் கலந்து கொண்டனர். இதில் உத்தராகண்ட் மாநில கல்வி அமைச்சர் தன்சிங் ராவத் கலந்து கொண்டு வழிகாட்டினார். புதுவை மாநில கல்வி அமைச்சர் நமசிவாயம் துவக்கி வைத்தார். தேசிய செயலாளர் அதுல் கோத்தாரி ஜி வழிகாட்டினார். பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் கல்வி நிறுவன தாளாளர்கள் கலந்து கொண்டு, ஞானகும்பம் 2024 நிகழ்ச்சியை சிறப்புற செய்தனர்.
“தாய், தாய்மொழி, தாய்நாடு” இவற்றுக்கு மாற்று வேறு ஏதும் இல்லை. தாய்மொழி வழிக் கல்வியை சிக்ஷா சம்ஸ்கிருதி உத்தான் நியாஸ் வலியுறுத்துகிறது. “தேசத்தை சீர்படுத்த, கல்வித் துறையை சீர்படுத்த வேண்டும்” என்று உயர்ந்த லட்சியப் பாதையில் பணியாற்றுகிறது.
கட்டுரையாளர்: தென் பாரத ஒருங்கிணைப்பாளர், சிக்ஷா சம்ஸ்கிருதி
உத்தான் நியாஸ்