காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வசந்த மண்டபத் தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த அத்திவரதர் இன்று (ஆகஸ்ட் 17) மாலை அனந்த சரஸ் குளத்துக்குள் சயனிக்க உள்ளார்.
கருங்கல் கட்டிலில் அத்திவரதர்
அத்திவரதரை குளத்துக்குள் வைக்கும் நிகழ்வு குறித்து கோயில் பட்டர் கிட்டு கூறியதாவது: பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பிறகு இன்று சுவாமிக்கு காலையும் மாலையும் பூஜைகள் செய்து பின்னர் தைலக்காப்பு சாற்றப்படும். இதைத் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து குறிக்கப்படும் நேரத்தில் சுவாமி பள்ளி அறையில் சயனிப்பார். அது சுவாமியின் பள்ளி அறை என்பதால் அவரை வைக்கும்போது படம் எடுக்கக் கூடாது.
கருங்கல் கட்டிலில் சயனிக்க உள்ள அத்திவரதரின் தலைப் பகுதி மேற்கு பாகத்திலும், திருவடி கிழக்கு பாகத்திலும் உள்ளவாறு வைக்கப்படுவார். தலைப் பகுதியில் ஆதிசேஷன் பொருத்தப்பட்டுள்ளது. சுவாமியை அந்தக் கட்டிலில் எழுந்தருளச் செய்து 16 நாக பாஷங்கள் அவரை சுற்றி வைக்கப்படும். பின்னர் பள்ளியறை பூஜை செய்யப்பட்டு குளத்தில் நீர் நிரப்பப்படும். இக்குளத்தில் 2 கிணறுகள் உள்ளன. அதில் எப்போதும் வற்றாத தீர்த்தம் சுரந்து கொண்டுள்ளது. முதலில் இந்த தீர்த்தம் நிரப்பப்பட்டு பின்னர் சுவாமிக்கு உண்டான பள்ளியறைப் பாசுரங்கள் பாடப்பட்டு இந்த விழா நிறைவு பெறும்.
1937-ம் ஆண்டும், 1979-ம் ஆண்டும் சுவாமி பள்ளியறை யில் சயனித்த பின்பு ஒரு மாதம் அதிக மழை பெய்துள்ளது. அதற்கு முன்பும் பெய்துள்ளதாக பெரியவர்கள் சொல்லக் கேட் டுள்ளோம். அதேபோல் இந்த ஆண்டும் மழை பெய்து தானா கவே இத்திருக்குளம் நிரம்பும் என்பது பெரியவர்கள் வாக்கு.