ஆலயங்களில் ஆன்மிக தீபம் ஓங்க குருக்களின் வழிகாட்டுதல் தேவை

மகாமக மகோத்ஸவம் திருநாவாயாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இது கேரளாவில் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவுக்கு அப்பாலும், இதன் தாக்கத்தை உணர முடிகிறது. இந்த மகோத்ஸவத்தை முன்னின்று நடத்தியவர் ஜுனா அகாடாவின் மகா மண்டலேஸ்வர் சுவாமி அனந்தவனம் பாரதி ஜி ஆவார். அவர் நமது நிருபர் சதீஷனுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் தமிழாக்கம் வருமாறு:
 மகாமக மகோத்ஸவம் கேரளாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
தீர்க்க தவம் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக பயனளிக்கக்கூடியது. குறிப்பிட்ட சில காலகட்டத்தில்தான் அபூர்வமான நிகழ்வுகள் நடைபெறும். இந்த மகோத்ஸவத்தை இப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த விழாவின் போது ஆர்.எஸ்.எஸ் முன்னாள் பிரச்சாரக் ஸ்ரீ அனந்தனை சந்தித்தேன். அவர் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பல தசாப்தங்களுக்கு முன் (மறைந்த) சங்கத்தின் மூத்த பிரச்சாரக் மாதவ்ஜியுடன் திருநாவாயா கோயிலுக்கு ஸ்ரீ ஆனந்தன் சென்றிருந்தார். அப்போது அவரிடம், இந்த புனிதத்தலம் எதிர்காலத்தில் ஹிந்து எழுச்சிக்கான கேந்திரமாக செயல்படும் என்று மாதவ் ஜி குறிப்பிட்டிருக்கிறார். இது இப்போது நனவாகி விட்டது. 3 ஆண்டுகளாக இந்த விழாவை நடத்த உத்தேசித்துள்ளோம். ஆனால் மூன்று நாட்களிலேயே, மகோத்ஸவம் அபார வெற்றி பெற்று விட்டது. இந்த சேத்திரம், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இதற்கு முன், இங்கு இத்தகைய எழுச்சி ஏற்பட்டதே இல்லை. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், பல்வேறு ஆசிய நாடுகளிலிருந்து எல்லாம் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர். தென் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து கொண்டே இருந்தனர். ஏறத்தாழ 40 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்பது காவல்துறையின் மதிப்பீடாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநாவாயாவுக்கு வரும் நதியின் தொடக்கப்பகுதியான ஆனைமலையில் பூஜை செய்தார்கள். மாமனார் வீட்டில் வாழும் பெண்ணுக்கு, அந்தப் பெண்ணின் பெற்றோர் சீர்வரிசை கொடுப்பது வழக்கம். இதை நினைவுபடுத்தும் வகையில் ஆபரணங்களை தமிழக பக்தர்கள் கொண்டு வந்தனர்.
 மாநில அரசின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?
முதலில் மாநில அரசு இந்த நிகழ்ச்சியை ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. பிறகு நிகழ்ச்சியை தடுக்க, அரசு தரப்பு முயற்சி மேற்கொண்டது. எங்களுக்கு நாள்தோறும் நோட்டீஸ் அனுப்பினார்கள். ஆனால் அவை யாவும் பயனற்று போய் விட்டன. டி.எஸ்.பி. ஜான்சன், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஷ்ணு ஆகியோர் ஒத்துழைப்பு நல்கினார்கள். பக்தர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி, புனித நீராடினார்கள். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை இதன் தாக்கம் எதிரொலித்தது.
 மற்ற சமூகத்தினர் எவ்வாறு நடந்து கொண்டனர்?
மலப்புரம் மாவட்டம் முஸ்லிம்களின் கோட்டையாகும். ஆனால், முஸ்லிம்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தார்கள். வாகனங்களை நிறுத்த தங்கள் வீட்டு முகப்புகளில் இடம் கொடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் பெண்கள், பக்தர்களுக்கு தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றையும் வழங்கினார்கள்.
 சேவாபாரதியின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?
சேவா பாரதி கார்யகர்த்தர்கள் இடைவிடாமல் தொடர்ந்து உதவி செய்தார்கள். நதி மாசடையவில்லை. அது தூய்மையாகவே இருந்தது. சங்கத்தின் மூத்த கார்யகர்த்தர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.
 உங்களது அகாடா குறித்து…?
இது உலகம் முழுவதும் பரவியுள்ளது. 3 லட்சம் ஆசிரமங்கள் உள்ளன. 10 லட்சம் சந்நியாசிகள் உள்ளனர்.
 மகாமண்டலேஸ்வர் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்?
மகாமண்டலேஸ்வரரை தேர்வு செய்யும் போது தலைமைப் பண்பு, பாரம்பரியம், வித்யாமிர்தம் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
 கேரளாவில் நாக சந்நியாசிகளின் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அதிகரிக்குமா?
எங்கள் அகாடாவைச் சேர்ந்தவர்கள் தான் நாக சந்நியாசிகள். அவர்கள் தர்மத்தைக் காக்க போராளிகளாக செயல்பட்டு வருகிறார்கள். மகாமக மகோத்ஸவத்தில் நாக சந்நியாசிகள் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் அவர்களது பணி விரிவடைய வாய்ப்புள்ளது.
 கேரளாவில் உள்ள மற்ற மடங்கள் குறித்து?
சுவாமி சின்மயானந்தா ஸ்தாபித்த மடம், பகவத் கீதையை பரப்புவதை முதன்மையாகக் கொண்டுள்ளது. சுவாமி சிதானந்தபுரி பல்வேறு மடங்களையும் ஒருங்கிணைத்து, தர்ம சந்தேஷ் யாத்திரை நடத்தினார். இது வரவேற்கத்தக்க முன்னெடுப்பாகும்.
 கோயில்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஆலயங்கள் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டே நிர்வகிக்கப்பட வேண்டும். ஆலயங்களில் ஆன்மிக தீபம் ஓங்க குருக்களின் வழிகாட்டுதல் தேவை. வேறு எந்த குறிக்கீட்டுக்கும், தலையீட்டுக்கும் இடம் கொடுக்கக் கூடாது.
 சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் களவாடப்பட்டுள்ளது. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
முன்பெல்லாம் மன்னர்கள்தான் ஆலயத்தை நிர்வாகித்தார்கள். அரச பரம்பரையினரின் நிர்வாகத்தில், இத்தகைய மோசடிகள் நடைபெற்றதில்லை. சனாதன தர்மத்தில் ஆழ்ந்த பற்றுடையவர்கள் மட்டுமே ஆலயப் பணிகளில் ஈடுபட வேண்டும். மற்றவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டும். இதை செய்யத் தவறாவிட்டால் தங்கத் திருட்டு போன்றவைற்றை தவிர்க்க முடியாது.
கட்டுரையாளர் : ஆர்கனைசர் நிருபர், கேரளா
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி