ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, செல்வ குடும்பத்தில் பிறந்த போதும் எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, சிவராமகிருஷ்ணன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
தற்போதைய கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் பி.கே. ராமசாமி ஐயர் – சாவித்திரி அம்மாளுக்கு மகனாக, 1940 ஜூன் 6ல் பிறந்தார், சிவராமகிருஷ்ணன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு அண்ணன். அவரது தந்தை விவசாயத் தொழிலை செய்து வந்தார். சிறு வயது முதலே சங்க ஷாகாவிற்கு செல்லும் வழக்கமுடைய சிவராமகிருஷ்ணன் ஜி, 1948 ஆம் ஆண்டில் தனது எட்டாவது வயதிலேயே “கட்நாயக்” பொறுப்பில் இருந்தார். வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று, சாங்கிக் நடக்கும் இடம் அவரது வீட்டில் இருந்து 50 கி.மீ தூரம் என்பதால், முதல் நாள் இரவே ரயிலில் சென்று, திருச்சியில் தங்கி சாங்கிக்கில் கலந்து கொள்வது வழக்கமாக இருந்தது.
மகாத்மா காந்தியின் படுகொலைக்கு பின்னர், பலரும் கைது செய்யப்பட்ட போது, “கட்நாயக்” பொறுப்பில் இருந்த எட்டு வயது பாலகனாக இருந்த சிவராமகிருஷ்ணன் ஜியையும் மற்றும் அவரது வயதுடைய நான்கு பால ஸ்வயம்சேவகர்களையும், காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களது உடைகளை அவிழ்த்து விட்டு, நிர்வாணமாக்கி துரத்தி விட்டனர், காவல் அதிகாரிகள். உடம்பில் எந்தவொரு துணியும் இல்லாமல், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து, இரவு 10 மணிக்கு தங்களது வீடு வந்து சேர்ந்தனர், சிவராமகிருஷ்ணன் ஜியும் மற்றும் அவரது நான்கு நண்பர்களும். பெருந்துன்பம் அனுபவித்த போதும், சங்கப் பணியை இடைவிடாமல் செய்து வந்தார்.
1956ல், மதுரையில் பல முக்கிய பிரமுகர்களுடன் “தென்னாட்டு சிங்கம்” என போற்றப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா தலைமையில், அன்றைய அகில பாரத ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி கலந்து கொண்ட பிரமாண்டமான சங்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அச்சமயத்தில் தேவரும், குருஜியும் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். அதற்கு ரக்ஷக் (பாதுகாப்பு) பொறுப்பு வகித்தது, தனக்கு கிடைத்த வாழ்நாள் பாக்கியம் என நம்மிடம் தெரிவித்தார், சிவராமகிருஷ்ணன் ஜி.
1956ல், அரியலூரில் நிகழ்ந்த ரயில் விபத்தின் போது, 18 சங்க ஸ்வயம்சேவகர்களுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட, நூறு கி.மீ. தூரத்தை 4 மணி நேர சைக்கிள் பயணத்தில் சென்றடைந்தார்கள். ஸ்வயம்சேவகர்களின் சேவைகளை பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.
1957ல், படிப்பு சம்மந்தமாக சென்னை வந்து தங்கியபோது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள மாங்கொல்லை ஷாகாவிற்கு செல்வார். அந்த ஷாகாவின் முக்கிய சிசஷக்காக பிற்காலத்தில் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற ஐராவதம் மகாதேவன் இருந்தார். 1961ல், டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதி தமிழகத்தில் ஏழாம் தரவரிசை பெற்று, அரசு கூட்டுறவுத்துறைப் பணியில் சேர்ந்தார்.
10 பகுதிகளைக் கொண்ட சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம் புத்தகம், விவேகானந்தரின் நூற்றாண்டு வருடமான 1963ல், அன்றைய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் வெளியிட, விழா மேடையில் புத்தகம் பெற்றார், சிவராம கிருஷ்ணன் ஜி. தமிழக அரசுப் பணியில் இருந்தாலும், வெளிப்படையாகவே சங்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
ஒருமுறை பாளாசாகேப் தேவரஸ் ஜி, ஸ்வயம்சேவகர்கள் நிறைய மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளிகள் தொடங்கி நடத்த வேண்டும் என கூறியதையடுத்து, 1982ல் சென்னை நங்கநல்லூரில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா சமயத்தில், நங்கநல்லூரில் “விஸ்வ பாரதி வித்யாலயா” பள்ளிக்கூடத்தை தொடங்கினார்.
மதுரை மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றத்தின் போதும், மண்டைக்காடு கலவரத்தின் போதும் சங்கத்தின் அறிவுரையின்படி, அந்தந்தப் பகுதிகளுக்கு சென்று இரவு-பகலாக தங்கி சங்கப் பணியாற்றினார். அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் சங்க ஏற்பாட்டில், வீடு வீடாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தார்.
நமது தர்மத்திற்கு எதிராக ஏதாவது செய்திகள் வந்தால், சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டவர், சிவராமகிருஷ்ணன் ஜி. ஒருமுறை மதமாற்றத் தடைச் சட்டம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த மசோதா குறித்து பிரபல நாளிதழ் செய்தி வெளியிடாததைக் கண்டித்து, தனியாக அந்த பத்திரிகை அலுவலகத்திற்கே சென்று வாதிட்டார். அதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நாளிதழ், உடனே அந்த செய்தியை வெளியிட்டது. தற்போது வயது மூப்பின் காரணமாக, தேசத்திற்கு எதிரான செய்திகள் வெளியிடும் பத்திரிகைகளுக்கு, நேரடியாக அப்பத்திரிகை அலுவலகம் செல்லாமல், கண்டனக் கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
1975 ஜனவரி 29ல், காமாட்சி அம்மாளை திருமணம் செய்த சிவராமகிருஷ்ணன் ஜிக்கு ராஜலட்சுமி, பாகீரதி என்ற இரண்டு மகள்களும், விஸ்வேஸ்வரன் (இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்துள்ளார்), கணபதி சுப்ரமணியன் (முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்துள்ளார்) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
காலஞ்சென்ற காமாட்சியம்மாள், ஹிந்தி பண்டிதாயினி. இவரிடம் படித்த நூறுக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் ஹிந்தியில் பிரவீன் படிப்பை முடித்துள்ளார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹிந்தி மொழியை, கற்றுக் கொடுத்துள்ளார். இந்து முன்னணியின் மகளிர் அமைப்பான “இந்து அன்னையர் முன்னணி”யில் பொருளாளர் பொறுப்பு வகித்து, அப்பகுதியில் திருவிளக்கு பூஜை, கோமாதா வழிபாடு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தி, நங்கநல்லூரில் ஹிந்து எழுச்சிக்கு வித்திட்டார்.
இளம் வயதில் பல அவமானங்களை சந்தித்தபோதும், அரசு வேலையில் இருந்த போதும், தொடர்ந்து சங்க வேலை செய்த சிவராமகிருஷ்ணன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவாக்காக திகழ்கிறார்.