வில்லும், அம்பும் ஏந்தி அயோத்தி நாயகன் ராமபிரான், இளவல் லட்சுமணனுடன் சேர்ந்து மக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய புகழோங்கிய வரலாறு கொண்ட மதுராந்தகம் திருத்தலத்தில் …
பாரத ராணுவ வீரர்களைக் கொண்டே ஆயுதம் ஏந்தி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை பாரத புண்ணிய பூமியிலிருந்து வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் துரத்தியடிக்க இந்திய தேசிய ராணுவம் கட்டமைத்து பாரத தேசத்தின் தென்கிழக்கு பகுதியை விடுவித்துக் காட்டிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று…
திமுக அராஜக தர்பாரை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் தமிழ் மண்ணில் இருந்து தேர்தலின் போது அப்புறப்படுத்தும் திட உறுதியோடு பிரம்மாண்டமான எண்ணிக்கையில் தமிழக வாக்காளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திரண்டு இருக்க…
பார் புகழ் பாரத பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசம் போல, அஸ்ஸாம் போல, குஜராத் போல, பிஹார் போல “தமிழகத்தில் இரட்டை எஞ்சின் அரசை தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ் மக்களுக்கு வழங்குவது உறுதி என்று அறிவித்தார். திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நாள் விரைவாக நெருங்கி வருகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
உண்மைதான். திமுக தர்பாரை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆங்காங்கே குரல் கொடுத்துக் கொண்டிருந்த பல கட்சிகள் ஒவ்வொன்றாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து சேர்ந்தது, பிரதமரின் குரலுக்கு வலு சேர்த்தது.
2021 மே மாத தேர்தலுக்கு முன்னதாக ஏப்ரல் 6 அன்று, கோவையில் செய்தியாளர்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழக வாக்காளர்களை மிகத் தெளிவாக எச்சரிக்கும் விதத்தில் “திமுகவை ஆட்சியில் அமர்த்தினால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரௌடி தர்பார் நடக்கும்” என சுட்டிக் காட்டினார்.
அதுபோலவே நடந்து, தமிழக மக்களும் அராஜக தர்பாரை அனுபவித்து விட்டார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் அந்தத் தவறு மறுபடியும் நடக்காது என்பதை அந்த மாபெரும் மதுராந்தகம் பேரணி ஐயம் திரிபற அறிவித்தது.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவது மதுராந்தகத்தின் அந்த பிரம்மாண்டமான பேரணி தெள்ளத் தெளிவாக தெரிவித்துவிட்டது என்று பிரதமரும் பாராட்டியிருக்கிறார். பார்ப்போம் … தமிழா, தமிழச்சி! உனக்கு இனி என்றென்றும் தேவை தேசியமே என்பதை தேர்தலில் தேசிய சக்திகளை வெற்றிபெற செய்து பிரகடனப்படுத்து!