எரடோஸ்தீனஸ், கலிலியோ போன்றவர்கள் துல்லியமாக கணக்கிட்டு பொது ஆண்டு 3ம் நூற்றாண்டில் உலகம் உருண்டை என்று கூறினர். ஆனால் நாம் கிருத யுகத்தில், கடவுள் வராகராக பூமியை காத்தார் என பூமியைப் பந்து போல வரைந்தும், அதற்கு முன்னரே வான சாஸ்திரம் அறிந்து “பூகோளம்” என்று பூமியின் சுற்றளவை கணக்கிட்டு, அதன் தன்மையை கண்டறிந்து பெயர் வைத்தவர்கள் பாரதியர்கள்.
ரைட் பிரதர்ஸ் விமானம் என்ற ஒன்றை கண்டுபிடித்து பெயர் வைக்கும் முன்னால், பல யுகங்களுக்கு முன் “புஷ்பக விமானம்” என்று பெயரிட்டு, அதன் வரைபடம் முதல் உருவாக்கம் குறித்து எழுதி வைத்தவர்கள் பாரதியர்கள்.
மேற்கத்திய கட்டிடக்கலைகள் புயலுக்கும், மழைக்கும் சீட்டுக்கட்டு போல் உடையும் பொழுது, நம் கட்டிடக்கலையின் மகத்துவமான கோயில்கள், அதில் மின்னலை கட்டுப்படுத்த கோபுரத்தின் மேல் செப்பு உலோகத்தால் ஆன கலசத்தை வைத்து, அதில் தானியங்களை வைத்தவர்கள் பாரதியர்கள்.
6 அடி ஆழத்தில் அடித்தளம் அமைத்து, 250 அடி கோபுரத்தை மேல் எழுப்ப முடியும் என நிரூபித்த ராஜராஜசோழன் பாரதியர். மேற்கத்திய பாடத்தை படித்து, கட்டும்பொழுதே இடியும் பாலங்களை கட்டுபவர்களுக்கு மத்தியில், கரிகாலன் கட்டிய கல்லணை, நமது பெருமையை உலகிற்கு பறைசாற்றும்.
நான்காம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலைக்கழகம் அமைத்து, உலகத்தினருக்கு கல்வி கொடுத்தவர்கள் பாரதியர்கள். கப்பல் கட்டுவதில் சிறந்து விளங்கியதால், 17, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நம் பம்பாய் கப்பல் கட்டும் தளத்தில் கப்பல் வாங்கியதாக குறிப்பு உள்ளது.
ராஜராஜசோழன் கல்வெட்டில் 800 குதிரைகள், 800 யானைகள், 2000 வீரர்கள், அவர்களுக்கான உணவு, தண்ணீர் நிரப்பி, படைக்கலன் கடல் கடந்து போரிட்டு வென்றது என்று குறிப்பிட்டு உள்ளது.
உலோகத்தைப் பயன்படுத்துவதில் பாரதியர்களை கண்டு வியந்தவர்கள் ஐரோப்பியர்கள். மத்திய கிழக்கில் டமாஸ்கஸ் வாளுக்கு, பாரதத்தில் இருந்து இரும்பு எடுத்துச் சென்றதாகவும், அதன் தன்மையை 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் ஆராய்ந்து வியந்து பாராட்டிய ஆவணம் உள்ளது.

பதிற்றுப்பத்தில் சிறிய பறவை மீன் கொத்துவது போல, காயத்துக்குள் ஊசி வைத்து தைத்து என மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ததற்கான குறிப்பை எழுதி வைத்தவன் தமிழன்.
மெக்காலே இங்கிலாந்து அவையில் பேசிய ஆவணத்தை பார்க்க வேண்டும். நம்முடைய கல்வியை கொண்டு செல்ல வேண்டுமானால், அங்கு இருக்கின்ற முறையான கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டவர். அதனாலேயே வகுப்பறை, ஜன்னல், கட்டிடம், என அடைத்து அதற்கு மின்சார விளக்கு, மின்சார விசிறி என அவர்கள் உடை முதல் பொருள் வரை விற்கும் இடமாக பாரதத்தை மாற்றினார்கள்.
சாம்பல், கரி, உப்பு வைத்து பல் தேய்ப்பதை அவமானம் என்று கூறி, பற்பசையை விற்ற ஆங்கிலேயர்கள், இன்று நம் பற்பசையில் உப்பு உள்ளதா? கரி உள்ளதா? சாம்பல் உள்ளதா? என கேட்கிறார்கள்.
கேழ்வரகு, சாமை, குதிரைவாலி என சிறுதானியம் சாப்பிட்டால் பட்டிக்காட்டான் எனக் கூறி, ஓட்ஸும், ரொட்டியும், மக்காச்சோளமும் காலை உணவு என மண்டையில் புகுத்தியது மெக்காலே கல்வி.
ஆதிக்க ஜாதியினர் மட்டுமே கல்வி கற்றனர் என திரும்பத் திரும்ப சிலர் சொல்கின்றனர். பாரதம் முழுவதும் எடுக்கப்பட்ட சர்வே குறிப்புகளில் இருந்து தமிழகத்தில் உள்ள சில இடங்களை பற்றிய குறிப்புகள் மட்டும் இங்கே தரப்படுகின்றது. திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, கடலூர், திருச்சி, சென்னை, சேலம், வடஆற்காடு மட்டுமல்லாமல், தெலுங்கு பேசும் மாவட்டங்களில் இருந்தும், கன்னடம் மலையாளம் பேசும் மாவட்டங்களில் இருந்தும் தரவுகள் தென்தமிழகத்தில் பெறப்பட்டுள்ளது.
அவர்கள் அட்டவணையில் பிராமணர்கள், வைசியர், பட்டியலினத்தவர், பிற சாதியினர், இஸ்லாமியர்கள் என கணக்கெடுத்து உள்ளனர். ஒரு சில மாவட்டத்தில், அங்குள்ள வேறு சில மிக சிறிய அளவில் இருந்த ஜாதியினரின் தரவுகளும் தரப்பட்டுள்ளது. ஜாதிவாரியாக, பயிற்று மொழி வாரியாக, மொழி வாரியாக, கற்ற கல்வியின் அடிப்படையில் தரவுகள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

ஆவணங்களின் அடிப்படையில், இன்றைய தமிழகத்தின் பகுதிகளில் 4 பிராமணப் பெண்களும், 11 வைசிய பெண்களும், பட்டியலினத்தில் 627 பெண்களும், பிற ஜாதியில் 317 பெண்களும், இஸ்லாமியர்களில் 239 பெண்களும் படித்துள்ளனர்.
மேலும், மேலே குறிப்பிட்ட தமிழக மாவட்டங்களில் 12,581 பிராமணர்களும், 38,127 வைசியர்களும், 42,240 பட்டியல் இனத்தவரும், 12,504 பிற சாதியினரும், 19,675 இஸ்லாமியர்களும் கல்வி பயின்றதாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. இது பெருமிதம் தரும் தகவலாக உள்ளது. காலம் காலமாக கட்டமைக்கப்பட்ட பிற ஜாதியினருக்கு கல்வி மறுக்கப்பட்டது என்ற பிம்பம் சுக்கு நூறாகி உள்ளது.
ஆங்கிலேயர்களின் ஆவணத்திலேயே 1800களில் பாரதத்தில் இருந்த கல்வி, கேம்பிரிட்ஜ், எடின்பர்க், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு இணையாக இருந்தது என ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. மொழியியல், இதிகாசங்கள், சமயங்கள் மட்டுமல்லாது வடிவக் கணிதம் (ஜியாமெட்ரி), வானவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உடலியல், இசை, கவிதைகள், ஆய்வு தத்துவம், நவீன மொழிகள், பொதுச் சட்டம், மருத்துவக் கல்வி, ஜோதிடம், புராணம், வரலாறு மற்றும் ஒரிய மொழி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் கற்று தரப்பட்டுள்ளன. கல்லூரிக் கல்வி மிகக் குறைந்த அளவே காணப்பட்டுள்ளது. அடிப்படைக் கல்விக்குப் பின் பெரும்பாலானவர்கள், தொழிற் கல்வி கற்றுள்ளனர்.
தொழிற்கல்வி, வீடுகளிலேயே பெற்றோர்களே குருவாக இருந்து கற்பிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில், உயர்கல்விக்கு பிராமணர்கள் சென்றதாக குறிப்புகள் உள்ளன. ஆனால் மருத்துவம், வானசாஸ்திரம் போன்றவை அனைவராலும் கற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. தொழில் கல்வியைப் பொருத்தவரை, கைவினைஞர்கள் முதல் நாவிதர்கள் வரை தன்னுடைய தொழிலை தன் குடும்பம் தான் செய்ய வேண்டும் என விரும்பியது.
என்னென்ன புத்தகங்கள், அகராதிகள் பயன்படுத்தப்பட்டன எனவும்; பாரதம் முழுவதும் ஜெய்ப்பூர், பெங்காலி என பல மாநில நிலையும் ஆவணமாக உள்ளது. அந்த ஆவணங்களை படிக்கும் பொழுது, வெள்ளையருக்கு வெகுகாலம் முன்பே பாரதத்தில் கல்வி நிலை மிகச் சிறந்த முறையில் இருந்ததை தரவுகள் மூலம் ஊர்ஜிதப் படுத்த முடிகிறது.
மேலும் 5 வயதில் இருந்து, ஏழு முதல் எட்டு வருடங்கள் பள்ளிக் கல்வி பயின்றுள்ளதாக குறிப்புகள் உள்ளன. மேற்படிப்பு என்ற கல்லூரி கல்வி, 3 முதல் 5 வருடங்கள் ஆராய்ச்சி வரை இருந்துள்ளது.
எல்லா குடும்பங்களும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டிருந்தது. அடிமையாக யாரும், யாருக்கும் இல்லை என்பதும், அவரவர் தொழிலின் உன்னதம் பேணப்பட்டதும் தெரிகிறது. மாணவர்கள் கொடுத்த கட்டணம், ஆசிரியர்கள் பெற்ற ஊதியம், அந்தக் காலத்திலேயே உள்ளூர் நிர்வாகம், அறக்கட்டளைகள் மூலம் சில பள்ளிகள் நிர்வகிக்கப்பட்டது பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.
ஜனநாயகம், சமூகநீதி, சோஷலிசம், மதசார்பின்மை போன்ற விழுமியங்களை காலம் காலமாக கடைப்பிடிப்பவர்கள் பாரதியர்கள். மூன்றாம் பாலினத்தை குறித்த புரிதல்கள் இல்லாத, ஏற்றுக் கொள்ளாத உலகம் இருந்த பொழுது, “திருதிய பிரகுருதி” என மூன்றாம் பாலினத்தவர் என பெயர் வைத்தவர்கள், பாரதியர்கள்.
1822ல் தாமஸ் மன்றோ என்ற சென்னை மாகாணத்தை ஆண்ட கவர்னர், அன்றைய நிலையில் மதராஸ் பிரசிடென்சியின் கல்வி நிலையை அறிய தயாரித்த அட்டவணையை பின்பற்றி, அனைத்து மாவட்டங்களின் கல்வி நிலை அறிக்கையை தயாரித்து அனுப்பிய கலெக்டர்களின் தரவுகளின் அடிப்படையில், எந்த ஆங்கிலேயர்கள் முறையான கல்வியை ஏற்படுத்தினர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டதோ, அதே ஆங்கிலேயர்களால் “மதராஸ் பிரசிடென்சி இண்டிஜீனஸ் எஜுகேஷன் சர்வே” என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளைக் கொண்டும் அதற்கு பின்னால் 1831-−32 “ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்” ஆவணத்தின் அடிப்படையில் கலெக்டர்கள் அனுப்பிய கடிதம் மூலம் நம் கல்வியின் தரத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
மெக்காலே கல்வி “பாரத நவீனத்துவத்தின் திறவுகோல்” என மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மெக்காலே கல்விதான் வேண்டுமென அவர்கள் சொல்வதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் பாரதத்திற்கு விடுதலை தந்தாலும், மதராஸ் ராஜதானியை இங்கிலாந்தில் இருந்து ஆள வேண்டும் என அடிமை சாசனம் எழுதியவர்களிடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
முனைவர். இரா. காயத்ரி
கட்டுரையாளர்: கல்வியாளர்