மீண்டும் சங்கிப்பலகைக்கு வரவேற்கிறோம். இலக்கியம் தொடர்பான இன்னும் சில சம்பவங்களைக் காண்போம். இப்போது போல் யார் வேண்டுமானாலும் சங்க காலத்தில் புலவர், கவிஞர், பேரறிஞர் என்று ஆகிவிட முடியாது.
ஒவ்வொரு படைப்பும் கற்றறிந்த ஆன்றோர் சபையில் பல சோதனைகளைத் தாண்டியே அங்கீகரிக்கப்பட்டது. பல கட்ட விவாதம், அனல் வாதம், புனல் வாதம், எல்லாம் வென்றுதான் படைப்பின் உன்னதம் நிலை நாட்டப்பட்டது. அப்படித்தான் திருக்குறளும் வென்றது.

மதுரை தமிழ்ச் சங்கத்தினர் திருக்குறளை ஏற்க மறுத்த போது, வள்ளுவர் மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தின் சங்கப்பலகையில் வைக்கிறார். மற்ற புலவர்களையெல்லாம் நீக்கிவிட்டு திருக்குறளை மட்டும் ஏந்திக்கொண்டது பலகை.
திருஞானசம்பந்தர் தன் பதிகங்கள் தாங்கிய ஏடுகளை வைகை நதியில் விட, நீரின் போக்கை எதிர்த்து ஏடுகள் கரை சேர்ந்தன. அந்தத் தலமே திருவேடகம். ஸ்ரீரங்கம் கோயில் வளாகம்; கம்ப ராமாயண அரங்கேற்றம். ஹிரண்ய வதம் படலம்; “சிரித்தது செங்கட் சீயம்” என வர்ணிக்கிறார் கம்பர். புலவர்கள் ஆட்சேபிக்க நரசிம்ம சன்னிதியிலிருந்தபடி நரசிம்மமே கர்ஜித்து உறுதி செய்தது.

வீதியில் கொட்டிக் கிழங்கு விற்கும் கிழவியைத்தான் “இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க” என்று தன் மகன் பாடினான் என்று கம்பர் கூறியதற்காக சரஸ்வதியே கொட்டிக் கிழங்கு விற்று வந்தாள். கம்பர் வாக்கு பொய்க்கலாமோ? ஒருவனை புலவனாக்க வேண்டுமென்று அன்னை பராசக்தி நினைத்துவிட்டால் அவன் குலம், இனம், புத்திசாலியா, மூடனா என எந்தப் பாகுபாடும் கிடையாது. அவன் பண்டிதன் ஆவது திண்ணம்.
ஆடு மேய்க்கும் இளைஞனின் நாவில் உஜ்ஜயினி காளியே அட்சராப்யாஸம் செய்ய, அவர் மஹாகவி காளிதாசன் ஆனார். நாம் ரசித்து மகிழ ரகுவம்சம், குமாரசம்பவம், மேகசந்தேசம் நூல்களெல்லாம் கிடைத்தன. பரிசாரகர் வாயில் திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரி தாம்பூலத்தை உமிழ, அவரல்லவா சிலேடைக் கவிதைகள் புனைவதில் வல்ல காளமேகப் புலவரானார்?
இருக்கிறது இன்னும் ஏராளம்!