சேவையே ஸ்வயம்சேவகர்களின் சிகர இலக்கு

தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் விஸ்வ சங்க `ஷிபிர்’ நடைபெற்றது. டிசம்பர் 28ம் தேதி நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், பாரத் பயோ டெக் நிறுவனர் கிருஷ்ணா எல்லா, ஆன்மிக குரு தாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

`பாரதத்தில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கிறது. புத்தாக்கம் மேலோங்கி வருகிறது. உள்நோக்கிய மாற்றமும் மெச்சத்தகுந்த வகையில் உள்ளது. இவற்றை செழுமைப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்’ என்று ஆன்மிக குரு தாஜி குறிப்பிட்டார்.

`ஜனநாயகம் மிகவும் சிறப்பானது. ஆனால், பாரதம் ஜனநாயகத்தை விட மேலான நிலையில் உள்ளது. இதற்கு தர்மமே அடிப்படை. நமது பண்பாட்டு முதிர்ச்சியை வேறு எங்கும் பார்க்க முடியாது. நாம் யார் மீதும் படையெடுத்தது இல்லை. ஆக்கிரமிப்பு செய்ததும் இல்லை.

`வசுதெய்வ குடும்பகம்’ என்ற அடிப்படையில் உலகத்தையே ஒரு குடும்பமாக நாம் பார்ப்பது தான் இதற்கு காரணம்’ என்று பாரத் பயோடெக் நிறுவனர் கிருஷ்ணா எல்லா குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: டாக்டர் ஹெட்கேவார் 1925ம் ஆண்டு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை தொடங்கினார்.

தேசத்தை மேம்படுத்த வேண்டுமானால் தனி நபர்களை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் சங்கத்தின் அடிப்படை கோட்பாடு. சேவை எந்த எதிர்ப்பார்ப்பும் அற்றதாக இருக்க வேண்டும். அங்கீகாரம் வேண்டும். உயர்வு வேண்டும் என்ற அடிப்படையிலோ அல்லது அச்சம், நிர்பந்தம் போன்றவற்றின் அடிப்படையிலோ சேவை செய்வது சங்கத்துக்கு ஏற்புடையதல்ல.

சேவையே ஸ்வயம்சேவகர்களின் சிகர இலக்கு. இப்படிப்பட்ட நல்லியல்பை உள்வாங்கிக் கொண்டதால்தான், எதையும் எதிர்பாராமல் எப்போதும் சேவை ஒன்றையே நிறை இலக்காகக் கொண்டு ஸ்வயம்சேவகர்கள் தொய்வின்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

தர்மம் மங்கினால் பிரச்சினை உக்கிரமடையும். தர்மம் பிரகாசித்தால் பிரச்சினை அஸ்தமித்து விடும். உலகில் பல்வேறு பிரச்சினைகள் மேலோங்கி உள்ளதற்கு தர்மத்தை புறக்கணித்ததுதான் காரணம். அறப்பாதையில் இருந்து நாம் ஒருபோதும் விலகக்கூடாது.

ஹிந்து சமூகம் எங்கு வாழ்ந்தாலும், தர்மத்திலிருந்து நழுவக் கூடாது, வழுவக் கூடாது. இதில் திடமாக இருக்க வேண்டும். உலகத் தலைமை என்பது ராணுவ பலத்தால் ஏற்படக்கூடியது அல்லது பொருளாதார வல்லாதிக்கத்தால் ஏற்படக்கூடியது என்று நாம் கருதவில்லை.

இதுதான் பாரத கண்ணோட்டம். உலகின் குருவாக பாரதம் உயர்ந்தோங்க வேண்டும் என்று நாம் கூறும்போது, ராணுவ பலத்தையோ அல்லது பொருளாதார வளத்தையோ சுட்டிக் காட்டவில்லை. யாரையும் நசுக்கக்கூடாது. அனைவரும் வாழ வேண்டும்.

நாம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். நம் சொல்லைக் காட்டிலும் செயலுக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. இயற்கையோடு இணக்கமான, நெருக்கமான வாழ்க்கைதான் நமக்கு இயல்பானது. இதிலிருந்து விலக மாட்டோம் என்பதை சங்கல்பமாக எடுத்துக் கொள்வோம். ஹிந்து சமூகம் உயர்ந்தால் தர்மம் தழைக்கும். தர்மம் செழித்தால் அகிலம் எழுச்சியுறும்’.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து

தமிழில் : நிகரியவாதி