டிரம்ப் கூறிய பொருளியல் விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

பாரதப் பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. சர்வதேச அளவில் உற்பத்தி
3.2 சதவீதமாக உள்ளது. ஆனால் பாரதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக உள்ளது. உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற சிறப்பு நமக்கே உரியது.

பாரதப் பொருளாதாரம் செத்துப் போய் விட்டது என்றே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருமாப்புடன் விமர்சித்தார். இது அபத்தமானது. உண்மைக்குப் புறம்பானது என்பதை நம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார். இந்த பதிலடி தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16ம் தேதி உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரதத்தில் ஏற்றதாழ்வு அதிகரித்து வருகிறது என்ற உலக சமத்துவமின்மை அறிக்கையை நிராகரித்தார். அந்த அறிக்கையில், நம் நாட்டில் உள்ள ஒரு சதவீத பணக்காரர்கள் வசம், 40 சதவீத செல்வம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பாரதத்தில் பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நகரப்பகுதிகளில் நுகர்வு அதிகரித்து வருகிறது. மொபைல் போன், டிவி, இரண்டு சக்கர வாகனங்கள், ரெப்ரிஜெரேட்டர்கள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம்.

முன்பெல்லாம் குளிர்சாதனப் பெட்டி ஆடம்பர பொருளாகப் பார்க்கப்பட்டது. இப்போது இது அத்தியாவசியப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. மத்திய தர வர்க்கம் விரிவடைந்து வருகிறது உள்ளிட்ட அம்சங்களை நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டினார்.

முன்னாள் ராணுவ அமைச்சர் (ஏ.கே.அந்தோணி) குறித்து நிர்மலா சீதாராமன் ஒரு கருத்தை தெரிவித்தார். அரசிடம் போதுமான அளவு பணம் இல்லை என்று ராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக முன்னாள் ராணுவ அமைச்சர் குறிப்பிட்ட காலம் இப்போது அடியோடு மாறி விட்டது என்பதை நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டினார்.

கடன் – உள்நாட்டு உற்பத்தி வீதம் சில மாநிலங்களில் சவாலாகவே உள்ளது. 2018 – 19ல் குடும்பத்தின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதமாக இருந்தது. இது 2024 – 25ல் 4.7 சதவீதமாக அதிகரித்து விட்டது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது இது 6.2 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. சர்வதேச அளவில் உற்பத்தி 3.2 சதவீதமாக உள்ளது. ஆனால் பாரதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக உள்ளது. உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற சிறப்பு நமக்கே உரியது என்பதை நம் நிதியமைச்சர் எடுத்துரைத்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம் பொருளாதாரம் செத்துப் போய் விட்டது என்று விமர்சித்து உள்ளது வெறும் பிதற்றலே. 8.2 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து வருகிறது என்பதுதான் நிகழ்கால நிலவரம். எனவே டிரம்பின் அபத்தக் கூற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

டிரம்ப் அதிக வரி விதித்த பிறகும், பாரதத்தின் ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை. உலகிலேயே அரிசி ஏற்றுமதியில் பாரதம்தான் முதலிடத்தில் உள்ளது. 2024 – 25ல், 20.2 மில்லியன் டன் அரிசியை நாம் ஏற்றுமதி செய்துள்ளோம்.

இதில் அமெரிக்காவுக்கு 3.35 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாஸ்மதி அரிசியின் பங்கு மட்டும் 2.74 லட்சம் டன்னாகும். அக்டோபர் மாதம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 6.3 பில்லியன் டாலராக இருந்தது. இது நவம்பர் மாதம் 6.98 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு சுமார் 10 சதவீதமாகும். பாரதத்தின் ஏற்றுமதி அதிகரிப்பில் ஸ்மார்ட் போன்களுக்கும், மருந்துப் பொருட்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.

பாரதப் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் எழுச்சி நடைபோடுகிறது. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் கடும் திணறலுக்கு ஆளாகி உள்ளது. அங்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அக்டோபர் மாதம் வேலையில்லாத் திண்டாட்டம் 4.5 சதவீதமாக இருந்தது. இது நவம்பர் மாதம் 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் 1.08 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்பதை அமெரிக்க தொழில்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரமே உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.

கச்சா எண்ணெய் விவகாரத்திலும் அமெரிக்காவின் மிரட்டல் எடுபடவில்லை. ரஷ்யாவிடமிருந்து, பாரதம் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து பிரச்சினையை சமாளித்து வருகிறது. சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்கப் பொருளாதாரம் இறங்கு முகமாக உள்ளது. பாரதப் பொருளாதாரம் ஏறுமுகமாக உள்ளது.

ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி