சித்தர்களின் தலைமை சித்தரான அகத்தியர் பிறந்த நட்சத்திரம் மார்கழி மாத ஆயில்யம் ஆகும். ஜனவரி 6 அன்று ‘’தேசிய சித்த மருத்துவ தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இது பெரும்பாலும், டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் தொடக்கத்தில் வரும்.
அகத்தியன் என்ற சொல்லுக்கு அகத்தில் ஈசனை நிறுத்தியவன் என்று பொருள். இவருக்கு கும்பமுனி என்ற பெயரும் உண்டு. கும்பம் என்றால் தன் உடலை காயகல்பம் செய்து மூச்சை கும்பகத்தில் அடக்கியவன் என்று பொருள். காயகல்பம் செய்யாமல் மூச்சை கும்பகத்தில் அடக்கினால் ராஜ பிளவு போன்ற பலவித நோய்கள் தோன்றும். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் இதை தவிர்ப்பது சிறந்தது.
“மனமது செம்மை யானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மை யானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மை யானால் மந்திரம் செம்மையாமே!”
(அகத்தியர் ஞானம்)
குருப் பரம்பரையை கொண்டாடுவது நமது பாரத நாட்டினுடைய கலாச்சாரமாகும். குரு பரம்பரையை சிறுமைப்படுத்தி, அதனை அழிக்க நினைப்பது கலாச்சார பயங்கரவாதமாகும். சிவபெருமான், பராசக்திக்கு அனைத்து வேத மந்திரங்களையும் உபதேசம் செய்ததாகவும், பின் அந்த மந்திர வேதங்களை அன்னை உமையாள், நந்திய பெருமானுக்கு உபதேசம் செய்ததாகவும், அதன்பின் நந்திய பெருமான் தன்னுடைய சீடர்களான அஸ்வினி, விஸ்வினி, திருமூலர், அகத்தியர் ஆகியோருக்கு உபதேசம் செய்ததாகவும் சித்தர்கள் குறித்த நூல்கள் கூறுகின்றன.
அஸ்வினி, விஸ்வினி, திருமூலர், அகத்தியர் ஆகிய பாட்டனார் வகையறாக்களே 18 சித்தர்கள் ஆவார்கள். அகத்திய பாட்டானாரின் சீடர்களே மச்சமுனி, சட்ட முனி, யூகி முனி, தேரையர் ஆகியோர் ஆவர்.

தொல்காப்பிய இலக்கணத்தின் மூல இலக்கண நூல் அகத்தியம்.
அகத்தியரின் முதன்மை அனுஷ்டானம் ஆகிய ஜீவசமாதி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயிலில் இருக்கின்றன. எங்கெல்லாம் அகஸ்தீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறதோ அங்கு அவருடைய அனுஷ்டானமான, ஜீவசமாதிகள் இருக்கின்றன.
அவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட அகத்தியர் ஜீவசமாதிகள் இருக்கின்றன. இதை படிக்கும் போது நமக்கு ஒரு ஐயம் ஏற்படலாம். அது எப்படி ஒருவர் இத்தனை ஜீவ சமாதியில் இருக்க முடியும் என்ற கேள்வி. ஜீவசமாதி சட்ட விதிப்படி ‘’பாவண சமாதி’’ என்ற சமாதி நிலை உண்டு. இதுவே சித்தர்களின் உயர்ந்த ஜீவ சமாதி நிலை. அதாவது சமாதியாகி குறிப்பிட்ட நாட்கள் வரை இருந்து பின், அதே உடலுடன் எழுந்து சென்று விடுவார்கள். சித்த மருத்துவம், ஞானம், ஜோதிடம், பூஜா விதிகள், ரசவாதம் பஞ்சபட்சி சாஸ்திரங்கள், ஆகியவற்றை குறித்து நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் அகஸ்தியர் மாமுனிவரால் இயற்றப்பட்டுள்ளன.
அகத்தியர் தோற்றம் பற்றியும், சிறப்புச் செயல்கள் பற்றியும், பல கதைகள் உள்ளன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுக்குள் விடுவித்தார், அகத்தியர். அவர் நீரின் மேல் படுத்தபடியே, 12 ஆண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை (ஆற்றல்களைப்) பெற்றார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
சிவபூஜை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காகம் உருவம்’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. அகத்தியர் தென்திசையில் பொதிகை மலையில் தங்கியிருந்தார். பொதிகையில் ஒரு (தமிழ் ) சங்கத்தையும் நிறுவினார் என்று வான்மீகியின் இராமாயணத்தில் அறிய முடிகிறது. கம்ப ராமாயணத்தில் பொதிகை மலையில் சங்கம் அமைத்திருந்த அகத்தியரை பாடல்வரிகளால் அறிய முடியும்” தென்தமிழ் நட்டகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம் “என்ற வரிகள் விளக்குகின்றன.
மணிமேகலை நூல்
“அமர முனிவன் அகத்தியன் தனது
கரகம் கவிழ்ந்து காவிரிப்பாவை”
என்று கமண்டலத்தில் நீர் [கங்கை] கவிழ்ந்து காவிரியாக தென்னகத்தில் பாய்ந்தது என்று மணிமேகலை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்
அகத்தியரைப் பற்றி – காஞ்சி புராணம்
“தென் மொழியை உலகமெலாம் தொழுதேத்தும் குட முனிக்கு வலியுறுத்தார் – கொல்லேற்றுப் பகர்” என்று கூறுகிறது. இவை போல் அகத்தியரைக் குறித்து புராணங்களில் உள்ள கதைகள் பற்பல. அகத்தியம் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும் நூல் என்றும் கருதப்படுகின்றது. அகத்தியமே தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் முதல் நூல் என்று பன்னிரு படப்பாயிரம் “ஆனாப்பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதல் நூல்” என்கிறது.
அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள ‘’சமரச நிலை ஞானம்’’ என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. இந்தோனேசியாவில், அகத்தியர் குறித்த பல கல்வெட்டுகளும், சிலைகளும் காணப்படுகின்றன. தமிழ் உள்ளளவும் அகத்தியன் இருப்பேன் என்பது அகத்தியரின் அருள் வாக்கு.
(தொடர்புக்கு : nanthihanuman@gmail.com)