பார்வைக்குப் பன்மை, பண்பால் ஒருமை!

இமயம் முதல் குமரி வரை எத்தனை எத்தனை வழிபாடு, மொழி, உணவு, உடை, இசை நெசவு நுட்பம், நடனம், வெவ்வேறு பாணி கட்டிடங்கள், கோவில்கள், சிற்பங்கள், சித்திரங்கள் அப்பப்பா… நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும்.

இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பாரதி கூறுவது போல் “ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோம்”! இதை நிரூபிப்பது போலவே வடக்கிலிருந்து இங்கும் இங்கிருந்து வட மாநிலங்களுக்கும் மக்கள் யாத்திரை சென்று வந்துகொண்டே இருக்கின்றனர்; இன்று நேற்றல்ல, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக. இன்றும் காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க தமிழகத்திலிருந்து யாத்ரீகர்கள் சென்று வருவதைப் பார்க்கிறோமே.

வெற்றிகரமான நான்காவது ஆண்டு இது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திர சோழன் கங்கை நீரை கங்கை கொண்ட சோழபுரத்திற்குக் கொண்டுவந்ததன் நினைவாக, இன்று நம் பிரதமர் வாரணாசியின் பிரதிநிதியாக கங்கை நீரைக் கொண்டுவந்து கங்கை கொண்ட சோழபுரத்து ஈசனுக்கு அபிஷேகம் செய்த போது பரவசமாகத் தான் இருந்தது.

சமீபத்தில் உடுப்பியில் உரையாற்றும் போது பிரதமர் நம்மை ஒரு சங்கல்பம் ஏற்கச் சொன்னார் பாரததேசத்தின் புண்ணியஸ் தலங்களில் குறைந்தது 25 இடங்களையாவது தரிசிக்க வேண்டுமென்பதே அது.

குஜராத்தில் வருடா வருடம் நடைபெறும், ஏராளமான மக்கள் பங்குபெறும் ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி திருமண வைபவமான மாதவபூர் மேளா பற்றியும் பிரதமர் குறிப்பிட்டுச்சொன்னார். அருணாசல பிரதேசத்திலிருந்து ருக்மணி குஜராத்தில் மாதவ்பூர் வந்து கண்ணனை மணந்த நிகழ்வின் கொண்டாட்டம் அது.

எத்தனையோ ஆண்டுகளாக ராஜஸ்தானில் பில் (Bhil) பட்டியல் சமூக மக்கள் கொண்டாடும் பாணேஷ்வர் மேளாவில் குஜராத் மாநிலத்திலிருந்தும் பில் மக்கள் தவறாது கலந்துகொள்கின்றனர்.

தெற்கில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு தேவாங்கர் சமூகத்தினரால் எடுக்கப்படும் விழா தொட்ட கத்தி ஹப்பா. இதில் பங்கேற்கவென்றே கர்நாடகா, ஆந்திரா இரு மாநிலத்திருந்தும் மக்கள் கொள்ளேகால் நகரில் குவிகின்றனர்.

இப்படித்தான் பெங்களூரில் நடக்கும் கடலேகாய் பரிஷே எனப்படும் நிலக்கடலை சந்தையில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரியிலிருந்து மக்கள் கலந்துகொள்வதும் சித்தூர் ஆடி கிருத்திகை விழாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என மூன்று மாநிலத்தவர் இணைவதும் சகஜமாக நிகழ்கிறது. மற்ற மாநில மக்களை மதிப்பது இதில் ஆதார சுருதி. காரணம். ஒரே கலாச்சாரம்.

எது நம்மை இணைக்கிறது? மேலோட்டமாக பல வேறுபாடுகள் தெரிந்தாலும் அடிப்படையில் நான் பாரதியன் என்ற எண்ணம்தான் நம்மை இணைக்கும் ஒரே நாடு எனும் உணர்வுப் பாலம் இயல்பாகவே பல நூற்றாண்டுகளாக நாம் ஒரே தேசமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆங்கிலேயன் வந்துதான் நம்மை ஒருங்கிணைத்து ஒரே தேசமாக அடையாளப்படுத்தி இந்தியா என பெயர் சூட்டினான் என்பது பொய்!