ஏற்றாத தீபம் எரிக்கும்

மதுரை காவல்துறை ஆணையர் மீதான நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது” என்று மத்திய அமைச்சர் முருகன் அப்பட்டமாக சொன்னார்.

திமுக எம்பி டி ஆர் பாலுவை நோக்கி இன்னொரு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இப்படியெல்லாம் பேசி உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் தலைவலியை தேடிக் கொள்ள வேண்டாம்” என்று சூசகமாக சொன்னார்.

பாரத அரசு, தமிழக திமுக அரசை என்ன செய்ய எண்ணுகிறது? அவமதிக்கப்பட்ட நீதிமன்றம் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை. அவமதிப்பவராக குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் மதுரை காவல்துறை ஆணையர்.

டிசம்பர் 3 அன்று திருப்பரங்குன்ற உச்சியில் தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றச் சென்ற ஹிந்துக்களை காவல்துறை தடுத்தது அல்ல பிரச்சினை. அவர்கள் உயர்நீதிமன்ற அனுமதியுடன் சென்றும் அவர்கள் தடுக்கப்பட்டது தான் விபரீதம்.

தீபம் ஏற்றும் ஹிந்துக்களின் மத உரிமையை பறிக்கும் விதத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, நீதிமன்ற ஆணையால் மனுதாரர்கள் பயனடைய முடியாதபடி செய்தது மாவட்ட காவல் துறை. எனவே 144 தடை உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

அப்போதும் கூட சட்டப்படி நடந்து கொண்ட ஹிந்துக்களை தீபம் ஏற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டது மதுரை காவல்துறை. இதில் அடிமேல் அடி வாங்கியது சமாதானமாக போகும் ஹிந்து சமுதாயம் என்பதால் திராவிட தர்பாரின் ஆணவம் தலைக்கேறியது.

தமிழகத்தின் எந்த ஒரு காவல்துறையை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க மாநில அரசின் முன் அனுமதி தேவை என்று டிசம்பர் 4 அன்று தமிழக அரசு துருப்புச்சீட்டை இறக்குவதாக கற்பனை செய்து கொண்டு ஒரு ஆணை பிறப்பித்தது.

முதல் முறை நீதிமன்றத்தை அவமதித்த செயலுக்கு காவல்துறை அதிகாரி எவரையும் தண்டிக்கும் எண்ணம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘நீ தடுக்கில் போனால் நான் கோலத்தில் போவேன்’ என சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டு மாநில அரசு மத்திய அரசின் நடவடிக்கைக்கு வெற்றிலை பாக்கு வைக்கிறது. வழக்கு விசாரணையின் போது (டிசம்பர் 12) மதுரை உயர்நீதிமன்றம் எடுக்கும் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறும்.

வழக்கு / காவல்துறை / நீதிமன்றம் / மாநில, மாவட்ட நிர்வாகம் எல்லாம் ஒருபுறம் இருக்க தமிழ்க் கடவுளை வழிபட தமிழ் ஹிந்து சமுதாயம், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தானாவே தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்படுகிறது.