“சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடு” என்று தமிழனுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ஊர்களில் வாடிகன் தர்பார் நடத்த வக்கிரமான முயற்சி நடந்திருப்பது திடுக்கிடச் செய்கிறது. அம்மன் கோயில் கும்பாபிஷேக அன்னதானத்தை ஊர் பொது மைதானத்தில் நடத்த விடாமல் செய்ய வேற்று மத கூட்டத்தார் முயற்சி தோல்வியை தழுவியது. ஹிந்துக்களின் விழிப்புணர்வு வென்றது.
ஒரு கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அவ்வளவுதான். ஊரில் ஒரு வேற்றுமதக் கூட்டம் சாமியாடத் தொடங்கி விட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நி.பஞ்சம்பட்டி கிராமத்தில், சமீபத்தில் காளியம்மன் − ராமர் கோயிலின் கும்பாபிஷேக உற்சவத்தில் கிராமத்தின் அரசு பொது மைதானத்தில் ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற ஆத்தூர் தாசில்தாரிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. அந்த, மைதானத்தை `பாஸ்கா மைதானம்’ என்ற பெயரில் ஆக்கிரமித்துள்ள கிறிஸ்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பஞ்சம்பட்டியிலிருந்து முன்னிலைக்கோட்டைக்குச் செல்லும் பொது சாலையில் வைத்து அன்னதானம் வழங்க ஆத்தூர் தாசில்தார் அனுமதி வழங்கினார். அதை ஏற்றுக் கொள்ளாத ஹிந்துக்கள், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் அந்த மைதானத்தில் அன்னதானம் வழங்க உத்தரவிட்டால் சட்ட − ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசுத் தரப்பு வாதிட்டது. “மைதானத்தின் ஒரு பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மேடை கட்டப்பட்டுள்ளது. அந்த மேடையில் ஒவ்வொரு ஈஸ்டர் பண்டிகையின்போதும் நிகழ்ச்சி நடத்தப்படும், எனவே அனுமதிக்க முடியாது” என கிறிஸ்தவரான சுரேஷ் பெர்க்மன்ஸ் தரப்பில் வாதிட்டனர்.

நீதிமன்ற தீர்ப்பு
“சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமாக இல்லாமல் அரசுக்கு சொந்தமாக இருக்கும்போது, மத அல்லது சமூக பின்னணியை பொருட்படுத்தாமல் அனைத்து பிரிவினருக்கும் அது கிடைக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் அன்று மைதானத்தை பயன்படுத்தலாம்; ஆனால் ஹிந்துக்கள் அதே இடத்தில் அன்னதானம் நடத்த முடியாது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஈஸ்டர் அன்று, ஹிந்துக்கள் அன்னதானம் அல்லது வேறு எந்த நிகழ்வையும் அதே மைதானத்தில் நடத்த விரும்புவதுபோல் இல்லை.
நவம்பர் 3 அன்று மைதானத்தில் மனுதாரரை அன்னதானம் நடத்த அனுமதிப்பதன் மூலம், கிறிஸ்தவ சமூகத்தின் உரிமைகள் பாதிக்கப்படுமா என எதிர்மனுதாரர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசு தரப்பில் எதிர்மறையாக பதிலளித்தாலும், சுரேஷ் பெர்க்மன்ஸ் தரப்பு வழக்கறிஞர் மௌனமாக இருந்தார். கிறிஸ்தவ சமூகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று அவரால் கூற முடியவில்லை.

அரசுக்கு சொந்தமான ஒரு பொது மைதானம், மக்கள் பொதுவாக பயன்படுத்த கிடைக்கும் நிலையில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அதை பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைக்க முடியாது. விலக்கி வைத்தால் அது அரசியல் சாஸனத்திற்கு முரணானது. ஏற்கெனவே அங்கு ஒரு `பைபிள் படிப்பு மையம்’ அமைக்க முயன்றபோது எதிர்ப்பு எழுந்தது.
அரசியல் சாஸனம் தரும் உரிமையை, வெறும் ஆட்சேபணை அல்லது சட்டம் − ஒழுங்கு பிரச்சினை அடிப்படையில் மறுக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது. என்பதை உயர்நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியது.

நீதிமன்ற தீர்ப்பு
“அன்னதானம் நடத்துவதை அரசியல் சாஸனம் தரும் ஒருவரின் அடிப்படை உரிமையின் எல்லைக்குள் கூட கொண்டு வர முடியும். ஏதேனும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அதை உரிய முறையில் கையாள வேண்டும். அடிப்படை உரிமைகளை நசுக்கும் எளிதான வழிமுறையை போலீசார் தேர்ந்தெடுக்கக்கூடாது. மனுதாரரின் கிராமத்தில் 2,500 கிறிஸ்தவ குடும்பங்கள், 400 ஹிந்து குடும்பங்கள் உள்ளன. கிறிஸ்தவர்களை விட ஹிந்துக்கள் குறைவாக உள்ளனர்.

“அன்னதானம் நடத்த தாசில்தார் அனுமதி அளித்துள்ளார். சாலையில் மக்களை அமர வைத்து உணவு வழங்குவது சரியாக இருக்காது. சம்பந்தப்பட்ட மைதானம் அரசுக்கு சொந்தமானது; அந்த இடத்தில் நிகழ்வை நடத்துவதன் மூலம், மூன்றாம் தரப்பினரின் உரிமைகள் பாதிக்கப்படாது. மைதானத்தில் அன்னதானம் நடத்த மனுதாரருக்கு அனுமதிக்கப்படுகிறது. மைதானம் ஒப்படைக்கப்பட்ட அதே நிலையில் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி அமைதியாக நடைபெறுவதை திண்டுக்கல் எஸ்.பி., உறுதி செய்ய வேண்டும்”
இவ்வாறு நீதியரசர் உத்தரவிட்டார்.
![]()
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அன்னதானம் நடத்தச் சென்ற ஹிந்துக்களை நான்கு நாட்களாக குறிப்பிட்ட வளாகத்திற்குள் காவல்துறை அனுமதிக்க மறுத்து விட்டது. மேலும் அன்னதானம் நடைபெறும் அன்று கூட காலை 6 மணி வரை உள்ளே அனுமதிக்கவில்லை என்கிறார் ஹிந்துக்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பொன். மணிகண்டன். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மைதானத்தின் வாசலிலும், சர்ச் வாசலிலும் குழுமி மைதானத்தின் உள்ளே செல்வதைத் தடுத்தனர். தொடர்ந்து போலீசாரின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில், 500 பேரை கைது செய்தும், 1,000 பேர் கலெக்டர் அலுவலகம் சென்று தங்களது ஆதார் கார்டுகளையும், ரேஷன் கார்டுகளையும் ஒப்படைப்பதாக நாடகம் ஆடினர். இவையெல்லாம் அரசு பொது நிலத்தை தங்களது சர்ச் நிலமாக மாற்ற செய்யப்படும் ஏமாற்று வேலை என்பது மட்டும் உண்மை. மேலும் நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் உள்ள திருஇருதய ஆண்டவர் சர்ச்சில் தாழ்த்தப்பட்ட சமூக கிறிஸ்தவர்களை தேவாலயத்திற்குள் நுழையவும் வழிபாடு நடத்தவும் வன்னிய கிறிஸ்தவர்களால் அனுமதி மறுக்கப்படுகிறது. ஹிந்து ஆலயங்களில் இதுபோன்ற ஒரு பிரச்சினை ஏற்பட்டால் உள்ளே நுழைந்து ஆலயத்திற்கே பூட்டு போடும் அரசு இந்த விஷயத்தில் பேசுவதற்கு கூட அஞ்சுகிறது. ஹிந்துக்கள் விஷயத்தில் உரிமையைக் பெறுவதற்கு கூட நீதிமன்றத்தை நாட வேண்டிய அவல நிலை பல இடங்களில் தொடர்கிறது.
இது போல நடப்பது இந்த
ப் பகுதியில் மூன்றாவது நிகழ்வாகும்.
![]()
வக்கம்பட்டி
வக்கம்பட்டி கிராமத்தில் சவ ஊர்வலம் சர்ச் வழியே கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றம் உத்தரவு பெற்று சவ ஊர்வலம் செல்லும் போது கூட பிரச்சினை ஏற்படுத்தினர். போலீஸ் பாதுகாப்போடு சென்ற அந்த ஊர்வலத்தில், எதிர்ப்பு தெரிவித்தவர்களை விட்டு விட்டு ஊர்வலத்தில் சென்ற ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
என். பெருமாள்கோயில் பட்டி
** என். பெருமாள்கோயில் பட்டி கிராமத்தில், காளியம்மன், பெருமாள் கோயில் திருவிழா கரகம் எடுத்துச் செல்லும்போது கூட பிரச்சினையை உருவாக்கினர். சர்ச் பண்டிகையின்போது நமது கோயில் முன்பாக பந்தல்களை அமைத்துக் கொள்கின்ற கிறிஸ்தவர்கள் நமது கோயில் திருவிழாக்களின் போது கரகத்தை எடுத்துச் செல்வதை அனுமதிக்க மறுக்கின்றனர். மேலும் பெருமாள் கோயிலில், புரட்டசி சனியன்று வழிபாடு நடத்துவதை தடை செய்கின்றனர். வெளியிலிருந்து வரும் பக்தர்களை கோயிலில் உள்ளேயே வழிபடுங்கள். வெளியில் எந்த விஷயத்தையும் நடத்தக் கூடாது என தடை ஏற்படுத்துகின்றனர். சமீபத்திய புரட்டாசி திருவிழாவின்போது கூட, நான்கு பேரை மட்டுமே அனுமதித்தனர் என்கின்றனர் கிராமப் பொதுமக்கள்.
வாடிகன் தர்பார்?
காரணம்? இந்தப் பகுதியில் பெரும்பான்மை சமூகமான வன்னியர்களும் மீனவர்களுமே இரு பிரிவிலும் உள்ளனர். கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள காரணத்தால் சிறுபான்மை ஹிந்துக்களின் உரிமையை தட்டிப் பறிக்கின்றனர். இதுபோன்று மூன்று ஊர்களிலும் பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் அரசு பொது இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு ஹிந்துக்களின் உரிமையை பறிக்கின்றனர். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல் அரசின் ஆட்சி ஆத்தூர் தாலுகாவில் சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்களுக்கு வழிபாட்டு உரிமையை மீட்டுத் தருமா என்பது கேள்விக்குறிதான். ஒவ்வொரு முறையும் தங்களது உரிமையை நிலைநாட்ட நீதிமன்றங்களுக்குச் சென்றுதான் மீட்க முடியும் என்றால் இது தமிழ்நாடா அல்லது நடப்பது வாடிகன் தர்பாரா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.