கோயிலில் திருவாசகம் பாட கட்டணமா

அறநிலையத்துறை என்பது, ஆலயங்களின் நிர்வாகப் பொறுப்புடன், உபரி நிதியைக் கொண்டு பக்தி இலக்கியங்களை வளர்க்கவும், பரப்பவும் வேண்டும் என்பது அடிப்படை. 1990களில், இதற்கான திட்டம் அறநிலையத்துறை ஆலயங்களில் செயல்பாட்டில் இருந்தது. வாரம் ஒரு நாள் ஆலயங்களில் உள்ளூர் தேவார, திருவாசக, திவ்யப்பிரபந்த வகுப்புகள் அல்லது பாடல் பயிற்சி கொடுப்பது, வகுப்புக்கு வருபவர்களுக்கு மதிய உணவு அளிப்பது என்பது அந்தத் திட்டம்.

1995−-96ல் நானும் எங்கள் ஊரான செங்கோட்டை பெருமாள் கோயிலில், ஞாயிறன்று திவ்யப்பிரபந்த வகுப்புகள் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். சாதி வேறுபாடின்றி, நிறைய இளவயதினர் வகுப்புக்கு வந்தார்கள். பின்னாளில் அவர்களே மாலை நேர சாயரட்சை தீபாராதனைகளில் சாற்றுமுறை பாசுரங்களைப் பாடினார்கள்.

ஆனால் இப்போது எப்படி இருக்கிறது என்பதற்கான உதாரணம், இதே பகுதியில் தென்காசியில் உள்ள பிரதான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆலய உழவாரப்பணி போல, அடியார்கள் சிலர் தென்காசி, குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை உள்ளிட்ட புகழ்பெற்ற ஆலயங்களில் ‘திருவாசக முற்றோதல்’ எனும் இறைத் தொண்டுப் பணியைச் செய்து வருகிறார்கள். வாரந்தோறும் சுற்றுவட்டார ஆலயங்களுக்குச் சென்று, காலை பூஜை முடிந்த பின்னர் மதியம் வரை இருந்து, திருவாசகம் பாடி வருவதை கடந்த கால் நூற்றாண்டுக்கு மேல் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

கயிலை கிருஷ்ணன் என்ற பெரியவர் தலைமையிலான குழுவினர், தென்காசி ஆலயத்தில் திருவாசகம் பாடச் சென்ற போது கோயில் செயல் அலுவலர் பொன்னி, ரூ.200 கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று, பிறகே பாட வேண்டும் என்று கூறியுள்ளார். இதென்ன புதுப் பழக்கம் என்று சொல்லி, வேறு வழியின்றி அவ்வாறு செய்துள்ளார்கள். பின்னர் ஆலய அறங்காவலரிடம் புகார் தெரிவித்த போது, அவரோ நீங்கள் பாடுங்கள், உங்களுக்காக நான் வேண்டுமானால் பணம் கட்டி விடுகிறேன் என்று சொன்னாராம். ஆனால் இது தவறான செயல் என்று குறிப்பிட்டு, இதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற கோயில்களிலும் இவ்வாறு கட்டணம் வசூலித்தால் என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார்கள்.

பின்னர் இது குறித்த தகவலை சமூகத்தளத்திலும் பகிர, மறு வாரம் கோயில் ஈ.ஓ., வாட்ஸ்அப்பில் போட்டு அசிங்கப்படுத்திவிட்டீர்களே என்ற ஆத்திரத்துடன், அவர்களை திருவாசகம் பாட விடாமல் கொட்டும் மழையிலும் அவதூறாகப் பேசி வெளியேற்றியுள்ளார். அதிர்ச்சி அடைந்த இந்து முன்னணி, விஹெச்பி., ஆலயப் பாதுகாப்பு குழு உள்ளிட்ட இயக்கங்கள், அக்.26 ஞாயிறு அன்று ஆலயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

எதற்கெடுத்தாலும் கட்டண வசூல் என்பதே அறநிலையத்துறையின் நிர்வாக லட்சணமாக உள்ளது. உபரிநிதி கொண்டு, தெய்வத் தமிழை வளர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அதற்கு உண்டு. ஆனால் அதற்கும் கட்டண வசூலில் இறங்கிவிட்டது வெட்கக்கேடு.