திருப்பரங்குன்றம், குன்றம் காத்த ஹிந்து சக்தி

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அக்டோபர் 10 தேதியிட்ட தீர்ப்பு ஒன்று பேசுபொருளாகியுள்ளது. திருப்பரங்குன்றத்தை காக்க சட்டரீதியாகவும் வீதியில் இறங்கியும் சிறைப்பட்டும் போராடிய லட்சக்கணக்கான தமிழக ஹிந்துக்கள் அனைவரின் ஒட்டுமொத்த வெற்றியாகவே கொண்டாடப்படும் தீர்ப்பு இது. ஹிந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ள இந்த நீதிமன்ற முத்திரை கிடைக்க நடைபெற்ற வெற்றிகரமான போராட்ட வரலாறு, அதன் தாக்கம் பற்றி விஜயபாரதம் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்கிறார் திருநெல்வேலி வழக்கறிஞர் கா. குற்றாலநாதன்.

ஆங்கிலேய ஆட்சியில், 1916ல் மதுரை ஜில்லா கலெக்டரிடம் CrPC 145 பிரிவின் கீழ் திருப்பரங்குன்றம் மலையில் உரிமை கோரி தர்கா நிர்வாகம் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் சமாதானம் செய்து முடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, 1923ல் மதுரை கீழமை நீதிமன்றம் 21 சாட்சிகள் விசாரித்து 300 ஆவணங்களை பரிசீலித்து, சட்டப்படி ஆக்கிரமிப்பாக கருதினாலும் தர்காவை அகற்றாமல் கருணை சமரச அடிப்படையில், தர்கா மற்றும் கோயில் எல்லைகளை வரையறுத்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கில், 1931 லண்டன் பிரிவி கவுன்சில், திருப்பரங்குன்றம் மலை முருகன் கோயிலுக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கியது.
இரண்டாம் உலகப்போர் காலம் (1939-1945), குறிப்பாக 1940களின் தொடக்கம். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, தீபமேற்றும் பழங்கால வழிபாடு தடை செய்யப்பட்டது. இதனால், மலையின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய சமூகத்தினர் (மதுரை சுல்தான் ஆட்சி காலத்திலிருந்து) பட்ஜம் கட்டி, தர்காவை விரிவாக்கினர். அவர்கள் மலையை “சிக்கந்தர் மலை” (Sikkandar Hill) என்று அழைத்து, உச்சியில் இஸ்லாமிய பச்சை பிறைக் கொடிகளை ஏற்றினர்.
இதை எதிர்த்து, அப்போதைய அந்தப் பகுதி எம்.எல்.ஏ. சின்னக்கருப்பு தேவர் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். அவர் தலைமையில், மக்கள் கூட்டம் மலையின் உச்சிக்குச் சென்று, பச்சை பிறைக் கொடிகளை அகற்றினர். அதற்கு பதிலாக, தேசியக் கொடியை ஏற்றினர்.
அதன் பின்பு சில காலம் மலை உச்சி தீபத்தூணில் தீபமேற்றப்பட்டது. நாளடைவில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில், தீபத்தூணில் தீபமேற்றுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தீபத்தூணில் தீபமேற்ற 1997ல் மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், ஹிந்து சமய, தர்கா இஸ்லாமிய எதிர்ப்புக்கு பயந்து, இன்று வரை அறநிலையத்துறை தீபத்தூணில் தீபமேற்றுவதில்லை.
இதனால் தைரியம் அடைந்த இஸ்லாமிய அடிப்படைவாத எஸ்.டி.பி.ஐ. அமைப்பு, கடந்த 2024 டிசம்பர் 27ல் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடப் போவதாக பிரச்சனையை துவக்கியது. ஹிந்துக்களின் எதிர்ப்பு காரணமாக, காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி தலைமையில் பலர் அங்கே அசைவ உணவு சாப்பிட்டதால் ஹிந்துக்கள் கொதித்தெழுந்தனர்.
இதனைக் கண்டித்து பிப்ரவரி 4ம் தேதி திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அறப்போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பல இடங்களில் கைது செய்யப்பட்டனர். அந்த அடக்குமுறை எல்லாம் இருந்தும் உயர்நீதிமன்ற உத்தரவில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, ஹிந்து ஒற்றுமையை வெளிக்காட்டியது, தமிழக அரசை அதிர வைத்தது.
அதனை தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக ஹிந்துக்களின் எழுச்சியை உலகத்திற்கு பறை சாற்றியது.
இந்நிலையில் ஹிந்து அமைப்புகள் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு ஒருபுறம் நடைபெற்று வந்தது. இவ்வழக்குகளை, நீதிபதிகள் ஜெ. நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.
அப்போது தமிழக அரசு கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “ஹிந்து அமைப்பு ‘கந்த மலை’ முஸ்லிம் அமைப்பு ‘சிக்கந்தர் மலை’ சமண சமூகம் ‘சமணர் குன்று’ எனவும், உள்ளூர் மக்கள் இதை ‘திருப்பரங்குன்றம் மலை’ எனவும் அழைக்கின்றனர். மலை உச்சியிலுள்ள சிக்கந்தர் தர்காவில் விலங்குகளை பலியிடுவதும், அதை வழிபாட்டு முறையில் உட்கொள்வதும் பாரம்பரியமாக முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில், பாண்டிமுனீஸ்வரர் கோயில், மலையாண்டி கருப்பசாமி மற்றும் பிற முனியப்பன் கோயில்களில் விலங்குகளை பலியிடுவது வழக்கம். திருப்பரங்குன்றம் மலையில், சமண கோயில்களும் உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தில், அனைத்து மதங்களாலும் நடைமுறையில் உள்ள அதே நடைமுறைகளைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது. எனவே ஹிந்து அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
தர்கா நிர்வாகம் தரப்பில், ‘தர்கா அமைந்துள்ள பகுதி, கொடிமரம் மற்றும் அதற்கு செல்லும் பாதை, புது மண்டபம், நெல்லித்தோப்பு தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது என குறிப்பிட்டது.
கோவில் நிர்வாகம் சார்பில் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது என விவாதம் நடந்தது.
நீதிபதி ஜெ.நிஷாபானு ஜூன் 24ல் பிறப்பித்த உத்தரவில், திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, மற்றும் ஜைன கோயில்கள் உள்ளன என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. திருப்பரங்குன்றம் மலை முழுவதும், 33 சென்ட் தவிர, முருகனுக்கு சொந்தமானது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தர்காவில் விலங்குகளை பலியிடுவது பழங்காலத்திலிருந்தே முஸ்லிம்களால் மட்டுமல்ல, பிற சமூகங்களாலும் ஒரு மத நடைமுறையாக பின் பற்றப்படுகிறது. மத நடைமுறையின் ஒரு பகுதியாக இருக்கும் விலங்கு பலியிடுவதை தடை செய்ய எந்தச் சட்டமும் இல்லாத நிலையில், அத்தகைய செயல்பாட்டைத் தடுக்கும் எந்த உத்தரவையும் இந்நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. திருப்பரங்குன்றம் மலை ஹிந்துக்களைப் பொறுத்தவரையிலும், முஸ்லிம்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளுக்கு உட்பட்டதாக இருப்பதால், எந்தவொரு தனிநபருக்கோ அல்லது எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கோ அல்லது சங்கத்திற்கோ சொந்தமானது அல்ல. மாறாக சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானது. கோயிலுக்குரிய உரிமைகள் மீறப்பட்டதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என கூறினார்.
மற்றொரு நீதிபதியான எஸ்.ஸ்ரீமதி அவர்கள் பிறப்பித்த உத்தரவில், கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த பதிலில், தர்காவில் அந்தக் காலத்திலிருந்தே பலியிடுவது நடைமுறையில் இல்லை. அது சமீபத்திய ஆண்டுகளில் செய்யப்படுகிறது’ என அறிக்கை தாக்கல் செய்தது. இதிலிருந்து, ரம்ஜான் அல்லது பக்ரீத் பண்டிகையின் போது தொழுகை நடத்தப்படாதது தெளிவாகிறது. மேலும் இது புதிதாகத் துவங்கிய நடைமுறையாகும். அதை அனுமதிக்க முடியாது.
மலையின் பெயரை மாற்றும் முயற்சி
சிக்கந்தர் மலை என்ற கூற்றைப் பொறுத்தவரை, 1920ல் நீதிமன்றம் மலையின் பெயரை ‘திருப்பரங்குன்றம் மலை’ என திட்டவட்டமாகக் கூறியுள்ளது. வருவாய்த்துறை பதிவுகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் மலையின் பெயரில் உள்ளன. மலைக்கு ‘திருப்பரங்குன்றம் மலை’என்று பெயரிடப்பட்டபோது, ‘மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அரசியல் கட்சி அமைப்பு’ என தங்களைக் கூறிக்கொள்ளும் சிலர், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை ஹஜரத் சிக்கந்தர் பாதுஷா மசூதியில் விருந்து நடத்தப் போவதாக ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டனர். அதில் ஆடு, கோழி அறுத்து, சமூக நல்லிணக்கத்திற்காக சமபந்தி விருந்து நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது, நிச்சயமாக குறும்புத்தனமானது மற்றும் திருப்பரங்குன்றம் மலையின் பெயரை மாற்றும் முயற்சியாகும். விலங்கு பலியிடுவதை பொறுத்தவரை, தர்காவின் கூற்று என்னவெனில், கந்துாரி என்பது நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் ஒருவகையான விலங்கு பலியாகும். அத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது கோயில் மற்றும் சில மனுதாரர்களின் கருத்து. தர்கா, கந்துாரி விலங்கு பலி நடைமுறையைப் பின்பற்றியிருந்தால், அதை நிரூபிக்க சில ஆதாரங்கள் இருக்கும். தர்கா நிர்வாகம் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
புனிதத்தை பாதுகாக்கும் பக்தர்கள்
சன்னிதி தெருவில் இறைச்சிக் கடை இல்லை. கோயிலிலிருந்து 300 மீட்டர் தொலைவில் இறைச்சிக் கடை இல்லை. 300 மீட்டருக்கு மேல் பிராய்லர் கோழிக்கடை இல்லை. உண்மையில் திருப்பரங்குன்றத்திலுள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் அசைவ உணவு சமைப்பதை அனுமதிப்பதில்லை. இந்த உண்மைகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் புனிதத்தை பக்தர்கள் எவ்வாறு பாதுகாக்கின்றனர் என்பதைக் கூறுகின்றன. கந்துாரி விலங்கு பலி நடைமுறைக்கு எதிர்ப்பு உள்ளது. சிக்கந்தர் தர்காவில் ஆடு மற்றும் கோழியை பலியிடுவது குறித்து வெளியிட்ட துண்டுப்பிரசுரம் நிச்சயமாக குறும்பு மற்றும் தீங்கிழைக்கும் செயல் என, இந்நீதிமன்றம் கருதுகிறது. இது சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும்.
தர்காவிற்கு வந்தவர்கள் சமணர் குகைகளில் பச்சை வண்ணம் பூசியுள்ளனர். காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் வழி என குறிப்பிடும் அறிவிப்பு பலகைகளிலும் பச்சை வண்ணம் பூசப்பட்டுள்ளது; இது கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை ‘திருப்பரங்குன்றம் மலை’ என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும். சிக்கந்தர் மலை என்றோ, சமணர் குன்று என்றோ அழைக்கக்கூடாது. மலையில் எந்த விதமான கல்குவாரி பணிக்கு, தடை விதிக்கப்படுகிறது.
காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு, மாலை 6:00 மணிக்கு மேல் யாரையும் அனுமதிக்கக்கூடாது. இதனால் மலை மேல் மின்சார வசதி செய்யப்பட வேண்டியதில்லை. சாலை, குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்தால் மலை சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே அந்த நிவாரணங்களையும் வழங்க இயலாது. தர்காவின் புனரமைப்பு பணிகளுக்காக தர்காவின் அறங்காவலர் தொல்லியல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று பணியை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.


இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்து அடிப்படையில் உத்தரவு பிறப்பித்ததால், தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். தலைமை நீதிபதியின் பரிந்துரைப்படி மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் அவர்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஹிந்து அமைப்புகள் சார்பில் ஆஜரான இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், கார்த்திகேய வெங்கடாஜலபதி வாதிட்டனர்.
திருப்பரங்குன்றம் கோயில் ஒரு குடைவரை கோயில். சிலைகளை மலை முழுவதிலிருந்தும் பிரிக்க முடியாது. முழு மலையும் புனித மலையாக கருதப்படுகிறது. இது ஒரு லிங்கமாக வணங்கப்படுகிறது. மலையைச் சுற்றி கிரிவலம் செல்வது, பழங்காலத்திலிருந்து உள்ள நடைமுறை.
விலங்குகளை பலியிடும் நடைமுறை
மதுரை மாவட்ட நீதிமன்றம்,’ நெல்லித்தோப்பு மற்றும் தர்கா பகுதியைத் தவிர முழு மலையும் கோயிலுக்குச் சொந்தமானது,’ என, 1920ல் சிவில் வழக்கில் உறுதி செய்துள்ளது. அத்தீர்ப்பில் விலங்குகள் பலியிடப்பட்டதற்கான குறிப்பு இல்லை. காசி விஸ்வநாதர் கோயிலும் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் ஆகம கோயில்கள் ஒருபோதும் அங்கு விலங்கு பலியிடப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை.
விலங்குகளை பலியிடும் நடைமுறை, 2024ல் மட்டுமே துவங்கியது. அதற்கு கோயில் நிர்வாகம் மற்றும் ஹிந்து பக்தர்களால் எதிர்ப்பு எழுந்தது என்றார்.
கோயில் தரப்பில் வழக்கறிஞர் மனோகர், மலைக்கு பாதிப்பு ஏற்படுத்த தர்கா நிர்வாகம் அல்லது முஸ்லிம்கள் முயற்சி மேற்கொண்ட போதெல்லாம் பொதுமக்களால் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன. கலெக்டரிடமும், போலீசாரிடமும் கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளனர். ஜனவரி, 30ல் நடந்த அமைதிக் குழு கூட்டத்திற்கு, கோவிலின் அறங்காவலர்கள் / செயல் அலுவலர் அழைக்கப்படவில்லை.
சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, முழு மலையும் கோயிலுக்குச் சொந்தமானது. அது ஒரு புனித மலையாக கருதப்பட்டு, ஹிந்துக்களால் வழிபடப்படுகிறது. அதை ஒரு போதும் ‘சிக்கந்தர் மலை’ என்று அழைக்கவோ அல்லது பெயரிடவோ முடியாது. இதற்கு சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உள்ளன.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மலையில் சிக்கந்தர் தர்கா இருப்பதையும், மலையின் பெயர் திருப்பரங்குன்றம் மலை என்பதையும், ஆவணங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. திருப்பரங்குன்றம் மலையைப் பற்றி, சிக்கந்தர் மலை என்று எந்தக் குறிப்பும் இல்லை.
வக்ஃப் வாரியம், ‘அனைத்து மசூதிகள் / தர்காக்களிலும் விலங்கு பலியிடும் சடங்கு நடைமுறையில் இல்லை’ என ஒப்புக்கொள்கிறது, சிக்கந்தர் தர்காவில் விலங்கு பலியிடுவதற்கு கோயில் நிர்வாகத்தால் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. ஒரு தரப்பினர் பழங்காலத்திலிருந்தே ஒரு நடைமுறை இருப்பதாகக் கூறி, மறுபுறம் அதை மறுத்தால், அத்தகைய வழக்கமான நடைமுறையை வலியுறுத்தும் தரப்பினர் அதை நிறுவ சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும், திருப்பரங்குன்றம் மலையில் விலங்கு பலியிடும் வழக்கமான நடைமுறை குறித்து, சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, நெல்லித்தோப்பு பகுதியில் எந்தவொரு விலங்கையும் பலியிட, சமையல் செய்ய, அசைவ உணவுகளை எடுத்துச் செல்ல அல்லது பரிமாற அனுமதிக்க முடியாது.
ரம்ஜான், பக்ரீத் பண்டிகையின்போது நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவர். மேலும் அவர்கள் பாரம்பரிய படிக்கட்டு பாதையை அசுத்தப்படுத்தவோ அல்லது சேதப்படுத்தவோ கூடாது ஹிந்து அமைப்பினரின் மனுக்களை அனுமதிக்கும் நீதிபதி எஸ்.ஸ்ரீமதியின் முடிவிற்கு உடன்படுகிறேன் என உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஹிந்துக்களுக்கு மன நிம்மதியை அளித்துள்ளது திருப்பரங்குன்றத்தை காக்க சட்டரீதியாகவும், வீதியில் இறங்கியும், சிறைபட்டும் போராடிய லட்சக்கணக்கான தமிழக ஹிந்துக்கள் அனைவரின் ஒட்டுமொத்த வெற்றியாகவே இந்த தீர்ப்பு கொண்டாடப்படுகிறது. ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும்.
கட்டுரையாளர்: மாநில செயலாளர்,
இந்து முன்னணி