தினமலர் சங்கம் மீது மாறாத நம்பிக்கை

சங்கத்தின் ப்ரச்சாரக்காக முதன் முதலில் 1970ம் ஆண்டு அன்றைய திருநெல்வேலி ஜில்லாவில் 5 தாலுகாவுக்கு பொறுப்பேற்றேன். ஒருமுறை பாபநாசத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் ஒரு பங்களாவில் சங்கத்தின் 2 நாள் பைட்டக் நடந்தது. அப்போதைய ஷேத்ர ப்ரச்சாரக் யாதவராவ் ஜோஷிஜி வந்திருந்தார். தினமலர் அலுவலகத்தில் இருந்து வந்த காரில் அவரும், டி.வி.ராமசுப்பையரின் கடைசி மகன் சத்திய மூர்த்தியும் வந்திறங்கினார்கள். சத்திய மூர்த்திஜி எங்களுடன் 2 நாட்களும் இருந்தார். அப்போதுதான் அவர் ஸ்வயம்சேவக் என்பது எனக்கு தெரிந்தது. நாகர்கோவிலில் கோவிந்தன்ஜி ப்ரச்சாரக்காக இருந்தபோது, சத்தியமூர்த்தியையும், அவரது அண்ணன் லட்சுமிபதியையும் ஷாகா அழைத்து வந்ததாக சொன்னார். மற்ற இரண்டு சகோதரர்களும் ஆதரவாளர்கள். அதுதான் எனக்கு தினமலர் குடும்பத்தில் முதல் அனுபவம்.

அப்போது, திருநெல்வேலி தினமலர் அலுவலகம் அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை சாங்கிக் நடக்கும். நான், இல.கணேசன், அப்போதைய ஜில்லா கார்யவாஹ் கண்ணன், வி.ஹெச்.பி வேதாந்தம்ஜி, பகவான்ஜி என நால்வரும் அதற்கு செல்வோம். சத்தியமூர்த்தியும் வாரம் தவறாமல் வருவார். அதேபோல, கூடங்குளத்தில் அதிக அளவில் மதமாற்றம் நடந்தது. நாம் விடிந்தகரை என்று அதற்கு பெயர் மாற்றி, நிறைய பேரை தாய்மதம் திருப்பினோம். அந்த பணிக்காக தினமலர் சார்பில் ஒரு மோட்டார் பைக்கும், மாதம்தோறும் ரூ.500 பணமும் கொடுத்தார்கள். விடிந்தகரை பணிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

பிறகு அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு ப்ரச்சாரக் வேலைக்காக சென்றுவிட்டு, 1989ல் மீண்டும் கன்னியாகுமரி விபாக் பிரச்சாரக்காக வந்தேன், நான், இல.கணேசன், ஏ.பி.வி.பி சடகோபன் (இப்போது சங்கத்தின் வடதமிழக செயற்குழு உறுப்பினர்) என திருநெல்வேலி காரியாலயத்தில் இருந்து வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை டிபன் சாப்பிட, காபி குடிக்க செல்வோம். உள்ளே சென்றதும் ராமசுப்பையரின் மனைவி கிருஷ்ணம்மாள் எங்களுக்கு காபி போட்டு தருவார். ‘’என் மகன்களுக்கு கூட அவர்களின் மனைவிதான் பரிமாறுவார்கள். ஆனால், எனது கணவர் கடைசி காலத்தில் சங்கப் ப்ரச்சாரகர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால், எனது கைகளாலேயே சங்க பிரச்சாரகர்களுக்கு காபி போடுவது, உணவு பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளேன்” என்பார்.

மூத்தப் ப்ரச்சாரக் கோவிந்தன்ஜி காலமான நேரம். நானும், எல்.ஜியும் தினமலர் வீட்டுக்கு சென்றிருந்தோம். “என்னய்யா… கோவிந்தன்ஜி காலமாகிவிட்டார், அவரது உறவினர்கள் யாரையாவது தெரியுமா?  துக்கம் விசாரிக்க வேண்டும்” என்று சத்தியமூர்த்தி கேட்டார்.  ”அவரது உறவு பையன் பாலிடெக்னிக் படித்தது மட்டும் தெரியும். இப்போது தொடர்பு இல்லை” என்றோம்.

“சங்கப் ப்ரச்சாரக் வாழ்க்கை எவ்வளவு கடினமானது. எங்கேயோ இருந்து குடும்பம் எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்துட்டாங்க. கோவிந்தன்ஜி தான் எங்களுக்கு சங்கத்தை புரிய வைத்தார். ஆனால், அவர் இறப்புக்கு துக்கம் விசாரிக்க முடியலையே” என்றார் சத்தியமூர்த்தி.

கோபால்ஜி, சூரிஜி வந்தால் அவர்களுக்கு ஏதாவது தருவதை கிருஷ்ணம்மாள் பாட்டி வழக்கமாகவே வைத்திருந்தார். சூரிஜி வரும்போதெல்லாம், சேவா பாரதிக்காக ரூ.25,000 நன்கொடை தருவார். வருடா வருடம் 200 ஏழைகளுக்கு துணி வாங்கி கொடுத்து, நம்மிடம் கொடுப்பார். நாம் ஏழைகளுக்கு விநியோகிப்போம்.

பா.ஜ.கவுக்கு எல்.ஜி. போன சமயம். கையில் பணம் இருக்காது. “கோவிந்தாச்சார்யா வரார். 3 நாள் செலவு இருக்கு” என்று கிருஷ்ணம்மாள் பாட்டியிடம் கேட்போம். ’கோவிந்தாச்சார்யா வரானா? அவனை பார்த்து எவ்ளோ நாளாச்சு. செலவு பண்ணிட்டு பில்லை மட்டும் என்னிடம் கொண்டு வந்து தாங்க என்றார். கன்னியாகுமரியில் இருந்து முரளி மனோகர் ஜோஷி யாத்திரை வந்தபோது தினமலர் வீட்டில் சாப்பிட அழைத்தார்கள். ஆனால், அதற்குள் தொண்டர்கள் வேறு எங்கயோ ஏற்பாடு செய்துவிட்டதால் தினமலர் ஊழியர்கள், பா.ஜ.க தொண்டர்கள் எல்லோரும் சாப்பிட்டார்கள். முரளி மனோகர் ஜோஷி அவர்கள் வீட்டுக்கு வந்து காபி குடித்துவிட்டு போனார்.

அதேபோல,  ஸ்ரீ வைகுண்டத்தில்
வி.ஹெச்.பி. பெயரில் பள்ளி தொடங்க வேண்டும் என்று கேட்டோம். கிருஷ்ணம்மாள் பாட்டி எனது சேமிப்பு பணத்துக்கு ஆண்டுக்கு 12.5 லட்ச ரூபாய் வட்டிப் பணம் வருகிறது. எல்லாவற்றையும் ஆண்டுதோறும் கொடுத்து விடுகிறேன்” என்றார். இராம.கோபாலன் ஜி வரும்போதெல்லாம் குறைந்தது 10,000 ரூபாயாவது கொடுத்து விடுவார். இப்படி அந்த பாட்டி சங்கம், பரிவார் இயக்கங்களுக்கு மட்டுமே செலவு செய்வார். மற்றவர்களுக்கு அல்ல.

1991ம் ஆண்டு தேர்தலின்போது இராம.கோபாலன் ஜி கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தார். பொதுக்கூட்டத்தின் நடுவே சிஐடி வந்து கோபால்ஜியிடம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு விட்டார். ஊர் முழுக்க கலவரம். கூட்டத்தை சீக்கிரமா முடிங்க” என்றார். கூட்டம் முடிந்ததும் தென்காசியில் ஒரு வீட்டுக்கு சாப்பிட சென்றோம். ஆனால், தென்காசி அடிக்கடி கலவரம் நடக்கும் பகுதி என்பதால்,  திருநெல்வேலியில் எங்கேயாவது தங்கி கொள்ளுங்கள் என்று காவல்துறையில் சொல்லிவிட்டார்கள். நேரடியாக திருநெல்வேலியில் தினமலர் வீட்டுக்கு சென்றுவிட்டோம். யாராவது அதிகாரி தங்க வேறு இடமில்லை என்றால் தினமலர் வீட்டுக்குத்தான் செல்வோம். அது நம்ம வீடு போல,

சத்தியமூர்த்திக்கு, அத்வானிஜி மீது அவ்வளவு பிரியம். “வீட்டில் என் அறையில் அத்வானிஜி படத்தை பார்த்துக்கொண்டுதான் முழிப்பேன். அவர் கிருஷ்ண பரமாத்மா போல” என்பார். 1991ல் திருநெல்வேலியில் சத்தியமூர்த்தி போட்டியிட்டார். பெண்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய அவரது மனைவி, மகள்களை அனுப்பி வைக்குமாறு கேட்டோம். மனைவி. 3 மகள்களும் வந்து வீடு வீடாக வந்து ஓட்டு கேட்டார்கள். அவர்கள் ஈரோட்டில் இருந்தபோது தேசிகன் ஜி (காரியாலயம் குண்டுவெடிப்பில் பலிதானம் ஆனவர்) அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தார். கிருஷ்ணம்மாள் பாட்டி உட்பட எல்லாருக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். “தேசிகன் ஜி எவ்வளவு பெரிய உயர்ந்த ஆத்மா” என்று பாட்டி சொல்லிக்கொண்டே இருப்பார்.

என்னை பாரதிய கிசான் சங்கத்துக்கு அனுப்பியபோது, முதல் ரசீது புத்தகத்தை திருச்சி தினமலரில் தான் அச்சடித்து தந்தார்கள். கிசான் சங்கம் பற்றிய நோட்டீஸ் போட்டு கொடுத்தார்கள். கோபூஜை பற்றி புத்தகம் போட வேண்டும் என்று கேட்டேன். 5,500 பிரதிகள் அச்சடித்துக் கொடுத்தார்கள். சங்க ஊர்வலங்களில் கொடுக்கப்படும் ‘இதுதாங்க ஆர்.எஸ்.எஸ்’  நோட்டீஸ் லட்சக்கணக்கில் அச்சடித்துக் கொடுத்தார்கள். இப்போது வி.ஹெச்.பி வேல் யாத்திரைக்கும் உதவி கேட்டதும், செய்வதாக கூறியுள்ளனர். இப்படி அந்த குடும்பம் சங்கத்துக்கு எப்போதும் இருக்கும். நெருக்கடி நிலை காலத்திலும் சங்கத்துக்கு அவர்கள் நிறைய உதவி செய்ததாக மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

சென்ற ஆண்டு விஜயதசமிக்கு திருச்சி & வேலூர் பதிப்பு தினமலர் ஆசிரியர் பாலாஜியை விருந்தினராக அழைத்தார்கள். அப்போது அவரது காலில் பிரச்சினை வந்து, உடல்நிலை சரியில்லை என்றாலும்  சென்றுவிட்டு வந்தார். போய்விட்டு வந்ததில் இருந்து, அவருக்கு சங்க பக்தி பன்மடங்கு அதிகம் ஆனது.

இப்படி தினமலருக்கும். சங்கத்துக்கும் இடையிலான உறவு வெளிப்படையானது. அவர்கள் செய்திகளை நடுநிலையாக தந்தாலும், தேசியம், ஹிந்து விஷயங்களில் சமரசம் செய்துக் கொள்வதில்லை. சங்கம் நூற்றாண்டு காணும் இந்த நேரத்தில் தினமலர் 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதுதொடர்ந்து, தழைத்தோங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.