மக்கள் தொகை, விரல் விட்டு எண்ணத்தக்க சில நாடுகளில் மட்டுமே வேகமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை தேக்கமடைந்துள்ளது அல்லது சரிந்து வருகிறது.
மக்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதற்கு மருத்துவ சேவையின் பங்களிப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் நோயால் நலிவுற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் முன்பு மிகவும் அபூர்வமாக இருந்தன. இப்போது இளைஞர்களையும், நடுத்தர வயதினரையும் கூட இது உக்கிரமாக தாக்குகிறது. மாரடைப்பு, புற்றுநோய், நீரிழிவு, மிகை ரத்த அழுத்தம் போன்றவற்றால் பெருமளவு உயிரிழப்பு ஏற்படுகிறது.
பொதுவாக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தும்படி உடல் உழைப்பில் ஈடுபட்டு வரும் உழவர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படுவது அரிதிலும் அரிது. ஆனால் துரதிருஷ்டவசமாக உழவர்களை நாம் முன்னோடிகளாக வரித்துக் கொள்ள முற்படுவதில்லை. திரையுலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளவர்களை முன்னோடிகளாக வரித்துக் கொள்ளும் போக்கு விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே பெரும்பாலான நேரத்தை கழிப்பது, நேரடியாக விளையாட்டுகளில் பங்கேற்காதது, ஆன்லைன் விளையாட்டிலேயே மூழ்கி இருப்பது, நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்றவற்றில் ஈடுபடாதது என எத்தனையோ காரணங்களை ஆரோக்கிய குறைபாட்டுக்கு சுட்டிக்காட்ட முடியும். வாழ்வியல் சார்ந்த சில மாற்றங்களை மேற்கொண்டால் ஆயுளை நீட்டிக்க முடியும். ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருகின்றனர். இவற்றுக்கு செவிசாய்க்க இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும்.
தினந்தோறும் குறைந்தபட்சம் 4,000 முதல் 5,000 அடிகள் நடக்க வேண்டும். நாள்தோறும் 10,000 அடிகள் நடப்பது சாலச்சிறந்தது என்ற போதிலும் பெரும்பாலானோருக்கு இது சாத்தியப்படாது என்பதால் 4,000 அடிகளாவது நடக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவதை புறந்தள்ளக்கூடாது. 100 மீட்டர் தொலைவுக்குக் கூட நடக்க மாட்டோம். வாகனத்தைத்தான் பயன்படுத்துவோம் என்ற அணுகுமுறை ஏற்புடையது அல்ல. எளிமையான வாழ்க்கையே ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் உறுதிப்படுத்தும். பகட்டான வாழ்க்கை பதற்றத்தை உச்சப்படுத்தும். பரவசத்தை அடியோடு பறித்து விடும்.
தினந்தோறும் குறைந்தபட்சம் 4,000 அடிகளாவது நடந்தால் ஜீரண மண்டலம் செம்மையாக இயங்கும். மன நலமும் குன்றாது. எடையும் அதிகரிக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக உறக்கம் நன்கு வரும். கூடுமானவரை பக்குவப்படுத்தப்பட்ட உணவுகளை விலக்குவதுடன் தினந்தோறும் 4,000 அடிகள் நடப்பதையும் தலையாய கடமை என எண்ணி நிறைவேற்றினால் உடல்நலம் சீராக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவாக இருக்கும். காலணிகளை அணியாமல் வெற்றுக் காலுடன் நடப்பது மிகவும் உகந்தது.