கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அந்நாட்டில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் 267 பேர் உயிர் இழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளர். மேலும் 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர். வெள்ளத்தால் அந்நாட்டில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கென்யாவுக்கு மனிதாபிமான உதவியாக இந்தியா கடந்த வாரம் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா ரோந்து கப்பல் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தக் கப்பல் கடந்த 10-ம் தேதி கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தை அடைந்தது. இதையடுத்து கென்யாவுக்கு இரண்டாவது தவணையாக 40டன் மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ராணுவத்தின் சரக்கு விமானம் மூலம் இந்தியா நேற்று அனுப்பி வைத்தது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கென்யாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரண்டாவது தவணை மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணமாக 40 டன் மருந்துகள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான தருணத்தில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டணி துணை நிற்கிறது. உலகிற்கு இந்தியா விஸ்வபந்துவாக திகழ்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.