”அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடுக்கு, ஆர்.எஸ்.எஸ்., எப்போதுமே ஆதரவாக இருந்து வருகிறது,” என, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழித்துவிடும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இதற்கு பதில் அளித்து ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியதாவது: இட ஒதுக்கீட்டுக்கு ஆர்.எஸ்.எஸ்., எதிராக இருப்பதாக சமூக வலைதளங்களில், ‘வீடியோ’ பகிரப்படுகிறது. இது முற்றிலும் தவறானது.
பொது வெளியில் இட ஒதுக்கீட்டை போதித்துவிட்டு, திரை மறைவில் அதற்கு எதிரான பணிகளை செய்யும் சிலர் இந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். அதில் கூறப்படும் கருத்துக்கள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை. இட ஒதுக்கீட்டின் தேவை உள்ள வரை, அது தொடர வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.,சின் கொள்கையாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.