‘‘ஷரியா முஸ்லிம் சட்டத்தின்படிதான் இந்த நாடு செயல்பட வேண்டுமா?’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வியெழுப்பினார். மேலும், காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையையும் அவர் தாக்கிப் பேசியுள்ளார்.
நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் மத்தியஅமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் ஷரியா முஸ்லிம் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறார். காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையால் பாஜகவுக்குத்தான் அதிக பலன் கிடைத்துள்ளது. அந்தத் தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு ஏராளமான மக்கள் பாஜகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். பாஜகவில் இணைந்தும் வருகின்றனர்.
பாதுகாப்பான நாடு, வளமான நாடு அமைய, ஏழைகளுக்கு நல்ல திட்டங்களை அளிக்கும் அரசை வாக்காளர்கள் தேர்வு செய்யவேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது, மற்றவர்களை மகிழ்விக்கவும், சமாதானப்படுத்தும் வகையிலும் இருக்கிறது. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை பொய்யான அறிக்கையுடன் பொதுமக்களிடம் வந்துள்ளனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ‘வியாக்திகாட் கானூன்’ (தனிப்பட்ட சட்டங்கள்) அமல்படுத்துவோம் என்று கூறுகின்றனர். அதாவது பிரதமர் மோடி தடை செய்த முத்தலாக் சட்டமான ஷரியா சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸார் கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள். இந்த நாடு அம்பேத்கர் இயற்றியஅரசியல் சாசனத்தால் நடத்தப்பட வேண்டுமா? அல்லது ஷரியத் சட்டம் மூலம் நடத்தப்படவேண்டுமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்?
தற்போது முஸ்லிம் பெண்களை பாதிக்கும் முத்தலாக் சட்டத்தை நீக்கிவிட்டோம். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் நாம் இருக்கிறோம். ஆனாலும் காங்கிரஸார் நாட்டைப் பிரிக்கும் தனிப்பட்ட சட்டங்களை அமல்படுத்துவோம் என்று கூறி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைப்போம். இவ்வாறு அமைச் சர் அமித் ஷா பேசினார்.