‘மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ராணுவத்தில் மேற்கொள்ள காங்., முயற்சி’

“ராணுவத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த, காங்கிரஸ் ரகசிய முயற்சி மேற்கொள்கிறது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, 2006ல் ஆயுதப்படைகளில் மத அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை பரிந்துரைத்தது. இது காங்கிரசின் தற்போதை தேர்தல் அறிக்கையில் எதிரொலிப்பது கவலையளிக்கிறது. சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி, ராணுவத்திலும் இந்த யோசனையை விரிவுப்படுத்தினால், அது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு நல்லதல்ல.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், ஓ.பி.சி.,களுக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீதத்துக்குள், முஸ்லிம்களுக்கு 6 சதவீதமும், பிற சிறுபான்மையினருக்கு 2 சதவீதமும் பரிந்துரைத்தது. காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள், நம் சமூகத்தை பிளவுபடுத்துவதாக உள்ளது. இது, மத அடிப்படையில், பின்வாசல் வழியாக நாட்டை பிளவுபடுத்த மேற்கொள்ளும் ரகசிய முயற்சியாகும். இவ்வாறு அவர் பேசினார்.