முஸ்லிம்களில் ஒரு பிரிவான தாவூதி போரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டில் ஐந்து லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்களாகவும், வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். உலகெங்கும், 10 லட்சம் பேர் இந்தப் பிரிவை பின்பற்றுகின்றனர்.
இந்த பிரிவின், ‘சயத்னா’ எனப்படும் உயர் தலைவராக இருந்த, முகமது பக்ருதீன், 2014ல் தன் 102வது வயதில், உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவருடைய இரண்டாவது மகன் முபாதல் சைபுதீன், சயத்னாவாக பதவியேற்றார்.
இதை எதிர்த்து, முகமது பக்ருதீனின் சகோதரர் குசைமா குட்புதீன் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘கடந்த, 1965ல், முகமது பக்ருதீன் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, என்னை இரண்டாவது நிலை தலைவராக அறிவித்தார். மேலும், தலைமைப் பொறுப்பை அடுத்து ஏற்பதற்கான ரகசிய பதவிப்பிரமாணத்தை எனக்கு தனிப்பட்ட முறையில் செய்து வைத்தார். அதனால், பிரிவின் அடுத்தத் தலைவராக என்னை அறிவிக்க வேண்டும்’ என, மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், 2016ல் குட்புதீன் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவருடைய மகன் தாஹிர் பக்ருதீன், இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தினார். தன்னை அடுத்த வாரிசாக தன்னுடைய தந்தை நியமித்துள்ளதாக பக்ருதீன் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றம், முபாதல் சைபுதீன் தலைமைப் பொறுப்பை ஏற்றதற்கு எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. இதுபோன்ற விஷயங்களில், நம்பிக்கைகளைவிட, ஆதாரங்களே முக்கியம். போதிய ஆதாரங்கள் இல்லாததால், குட்புதீன் மற்றும் அவருடைய மகன் பக்ருதீன் வாதங்களை ஏற்க முடியாது என, நீதிமன்றம் கூறியுள்ளது.