இந்த தேர்தலில் நான்கு முக்கிய விஷயங்கள் முன்னுள்ளன. ஒன்று, கடந்த பத்தாண்டுகளைப் போலவே அடுத்த ஐந்தாண்டுகளும் நிலையான ஆட்சி. இரண்டு , பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தலைவரல்ல மாறாக, மோடியை போல் கடந்த பத்து ஆண்டுகளாக, வளர்ச்சியும் தேச பாதுகாப்பையும் உறுதி செய்த தலைவர்.
மூன்று, மோடியை போல் தேச நலனை பாதுகாப்பதுடன் உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய இந்திய தலைவர். மோடிக்கு மாற்றாக இருப்பது இண்டி கூட்டணி. அது கூட்டணி கட்சிக்குள்ளேயே சண்டையிட்டு அழியக்கூடியது. இண்டி கூட்டணி நிலையான ஆட்சியை தரும் என்று அரசியல் விவரம் தெரிந்த எவராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. மோடிக்கு மாற்று இல்லை, அவரைவிட சிறந்தவர்கள் எவரும் இல்லை.
இறுதியாக, மக்கள் முன்னுள்ள விஷயம், மோடியின் பத்தாண்டு கால ஆட்சி மீண்டும் வேண்டுமா அல்லது 1989-98 வரையிலான பத்து ஆண்டுகால நிலையற்ற, குழப்பமான ஆட்சியா என்பது. பத்தாண்டுகளுக்கு முன்பு- மோடி வருவதற்கு முன்பு- நிலையான ஆட்சி, உறுதியான தலைமை என்பதை நாடே மறந்து போயிருந்தது. அவரது இரண்டு ஆட்சி காலத்தில் நிலையான அரசும் உறுதியான தலைமையும் நாட்டிற்கு எந்த விதத்தில் நல்லது, உலகத்திற்கு நன்மையானது என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
மோடி 1.0
முதல்முறை மோடி பிரதமரானதும் அவருக்கு முன்பு பத்தாண்டு கால காங்கிரஸின் கேடான ஆட்சியினால் விழுந்து போயிருந்த பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டினார். அவர் எடுத்த ஒவ்வொரு முடிவும் மிகவும் வலி மிகுந்தது.
அவர் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட, மிகப்பெரும் ஊழலுக்கு காரணமான, 2ஜி உரிமத்தை ரத்து செய்தார். அந்த உரிமங்களை மீண்டும் ஏலமிட்டு அதன் மூலம் பெரும் வருமானத்தை அரசுக்கு சேர்த்தார் . குரோனி முதலாளித்துவத்தை வேருடன் அழிக்க துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டார் . அதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றார்.
வங்கிகளின் வாரா கடன் என்ற பெரும் பெரிய பிரச்சினையை தீர்க்க முடிவெடுத்தார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வேண்டியவர்களுக்கு வழங்கப்பட்ட முறையற்ற கடன்களினால் வாராக்கடன் பிரச்சனை விஸ்வரூப வடிவெடுத்தது என முன்னாள் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் ஒப்புக் கொண்டுள்ளார். வாராக்கடன் பிரச்னையினால் யாருக்குமே கடன் வழங்க முடியாமல் இருந்தன வங்கிகள். அதனால் எல்லா வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.
மோடி வங்கிகளுக்கு முதலீட்டை அளித்தார். அதனால் திவால் ஆகும் நிலையில் இருந்த வங்கி தொழில் மீண்டும் உயிர் பெற்றது. அவை மீண்டும் கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபடும் வரை காத்திராமல் அரசே உத்தரவாதம் கொடுக்கும் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் 130 மில்லியன் சிறு, குரு வியாபாரிகளுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்தார். அது சுயதொழில் செய்வோரை காப்பாற்றியதுடன் அந்த துறைக்கே மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. தனது முதல் ஆட்சி காலத்தின் போது முந்தைய ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆழமான பொருளாதார பிரச்சனைகளை தீர்த்தார்.
பயங்கரவாதத்தை அவர் எதிர்கொண்ட விதம் இதுவரை இந்தியா அறியாதது. இந்தியாவைப் போல் அல்லாமல் நாங்கள் அணு ஆயுதம் வைத்திருப்பது பயன்படுத்த தான் என்று அறிவித்துள்ள பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்று துல்லிய தாக்குதலை நடத்தினார். பாகிஸ்தான் அதிர்ச்சியில் உறைந்து போனது. எல்லை தாண்டி சென்று பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியாவின் செயலை உலகம் ஏற்றுக் கொண்டது.
எல்லையில் சீனாவின் அத்துமீறரல்களுக்கு பதில் தராமல் அமைதியாக இருக்கும் இந்தியாவின் தோல்வி மனநிலையை மாற்றி, சீன எல்லைக்குள் புகுந்து, டோக்லாமில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் படைத்தளத்தை அழிக்க இந்திய ராணுவத்திற்கு மோடி உத்தரவிட்டார். இந்த செயலால் சீனா திகைத்து நின்றது. மேற்கத்திய நாடுகள் பாராட்டின. அதே வேளையில், உள்நாட்டில் இருந்த இடதுசாரி நக்சல் பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கினார்.
மோடியின் சாணக்கியத்தனம் வேறு ஒரு வகையில் வெளிப்பட்டது. மென்மையான பிரிவினைவாதியான மெஹூபா முப்தியுடன் அரசியல் கூட்டணி வைத்தபோது பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மெஹூபாவின் பதவி ஆசையை பயன்படுத்திக்கொண்டு மோடி அதுவரை ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்தில் நுழையவே முடியாமல் இருந்த மத்திய அரசை நுழைத்து விட்டார்.
பின்னர் அந்த மாநில அரசை கலைத்துவிட்டு மத்திய அரசின் ஆளுகைக்கு கீழ் அம்மாநிலத்தை கொண்டு வந்தார். அதன் விளைவாக, அவர் இரண்டாவது முறை பிரதமரான போது மாநிலத்துக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.
மோடி பாஜகவின் அரசியல் அடையாளத்தை மாற்றி அதை மாபெரும் தேசிய சக்தியாக்கினார். விளைவாக, பல்லாண்டு காலமாக ஊடுருவலாலும் பிரிவினைவாதத்தாலும் பாதிக்கப்பட்டு இருந்த வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக வளர்ச்சி அடைந்தது. பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த வடகிழக்கு பகுதிகளின் பிரச்சனையை தனது வளர்ச்சி திட்டங்கள் மூலமாக தீர்க்க முனைந்தார்.
தனது அமைச்சரவை சகாக்களை அம்மாநிலங்களுக்கு அடிக்கடி செல்லவும், அங்கு தங்கி இருக்கவும் செய்தார். ஏறத்தாழ எல்லா அமைச்சர்களும் போனார்கள். சுமார் 250 மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவரும் பலமுறை அங்கு சென்றதுடன் அந்த பகுதிகளில் கற்பனைக்கு எட்டாத அளவில் வளர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் விளைவாக வடகிழக்கு மாநிலங்கள் மைய பாரதத்துடன் நன்கு இணைந்தன. பாஜகவும் அங்கு முக்கியமான அரசியல் சக்தியாக வடிவெடுத்தது.