ஜார்க்கண்டில் அமைச்சர் பதவி அளிக்கப்படாததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் போர்க்கொடி துாக்கியுள்ளதால், அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், அது, காங்கிரசின் உட்கட்சி விவகாரம் என்றும், முதல்வர் சம்பாய் சோரன் விளக்கம் அளித்துள்ளார். ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் மீது நிலமோசடி தொடர்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக புகார் எழுந்தது. இதைஅடுத்து, அமலாக்கத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததை அடுத்து, ஜார்க்கண்டின் புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார். அம்மாநில அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த ஐந்து பேரும், காங்கிரசைச் சேர்ந்த மூன்று பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், அமைச்சரவை பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறாதது குறித்தும், பழைய முகங்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தது குறித்தும் காங்., கட்சியைச் சேர்ந்த, 12 எம்.எல்.ஏ.,க்கள் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி துாக்கினர். இவர்களில் எட்டு பேர், தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் டில்லி புறப்பட்டு சென்றனர்.
இதனால் சம்பாய் சோரன் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று டில்லி வந்த சம்பாய் சோரன், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, அரசியல் நிலவரம் குறித்தும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியது குறித்தும் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் போர்க்கொடியால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை; அது அக்கட்சியின் உள் விவகாரம். இங்கு ஜே.எம்.எம்., – காங்., கூட்டணி நிலையாக, பலமாக உள்ளது. மரியாதை நிமித்தமாகவே மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பாக எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார். மொத்தம் 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில், ஆளும் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 29 எம்.எல்.-ஏ.,க்களும், காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.,க்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஒரு எம்.எல்.ஏ.,வும் உள்ளனர். இதற்கிடையே, பீஹாரைத் தொடர்ந்து மாநிலம் முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஜார்க்கண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.