”வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. இதை எதிர்க்கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. தற்போது பல வெளிநாடுகளும் இதை உணர்ந்துள்ளன. அதனால், தங்கள் நாட்டுக்கு வரும்படி இப்போதே அழைப்பு விடுத்துள்ளன,” என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பா.ஜ.,வின் பல்வேறு நிலைகளில் உள்ள, 10,000த்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று நிறைவுரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் நாம் பல சாதனைகளை படைத்துள்ளோம். பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாதவற்றை, இந்த 10 ஆண்டில் நாம் நிறைவேற்றினோம். அது ராமர் கோவிலாக இருந்தாலும் சரி, ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளோம். நாம் வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். இதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிகவும் முக்கியம். இதில் தான், அதற்கான அடித்தளம் அமைக்க உள்ளோம்.
அதனால், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் உள்ளோம். இதை அரசியல் நோக்கத்துக்காகவோ, அதிகாரத்தை அனுபவிப்பதற்கோ நாங்கள் கேட்கவில்லை. நாட்டு மக்களின் நலனுக்காகவும், நாட்டின் சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்காகவும், மீண்டும் ஆட்சியை தரும்படி மக்களிடம் கேட்கிறோம்.
இதை எட்டுவதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி, 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதை உறுதி செய்ய, பா.ஜ., குறைந்தபட்சம் 370 இடங்களில் வெற்றி பெற வேண்டும். மற்றவர்களை போல நாங்கள் சொந்த நலனை கருதியிருந்தால், கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டிருக்க முடியாது; நான்கு கோடிக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டித் தந்திருக்க முடியாது. நம் நாட்டின் இளைஞர்கள், பெண்கள், ஏழைகளின் கனவை நனவாக்குவதே நம் குறிக்கோள்.
அடுத்து வரும் 100 நாட்கள், கட்சித் தொண்டர்களுக்கு மிகவும் முக்கியமான காலம். மக்களின் முழு நம்பிக்கையை பெறும் வகையில், இந்த 100 நாட்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது; அதற்காக உழைக்க வேண்டும். நமக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சியினருக்கும் அந்த எண்ணம் உள்ளது. அவர்களே அதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதை விட, பல வெளிநாடுகளும், பா.ஜ., ஆட்சி மீண்டும் அமையும் என்பதில் பெரும் நம்பிக்கை வைத்துள்ளன. அதனால் தான், வரும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்., மாதங்களில் வரும்படி, பல நாடுகள் தற்போதே எனக்கு அழைப்பு விடுத்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.