கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள். 10 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா மீது சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் முடிவு எடுக்காததால், சுப்ரீம் கோர்ட்டை நாடினர்.
அவர்களது முறையீட்டை கடந்த 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது 16-ந்தேதி (நேற்று) வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் நேற்று நடைபெற்றது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி கூறும்போது, “தற்போது வழக்கு தொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் விலகினால் அரசு கவிழ்ந்து விடும். இவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முகாந்திரம் இல்லை. அப்படி தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டு இருந்தாலும், இந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதில் எந்த தடையும் கிடையாது. தகுதி நீக்கம் தொடர்பான நடவடிக்கை என்பது இந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு போடும் முட்டுக்கட்டையாகும்” என்றார்.
சபாநாயகர் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, “எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளிப்பதற்கு முன்பே தகுதி நீக்கம் தொடர்பான நடவடிக்கை தொடங்கி உள்ளது. தகுதி நீக்க நடவடிக்கை என்பது கொறடாவின் பரிந்துரையில் எடுக்கும் நடவடிக்கையாகும். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கடந்த 11-ந்தேதிதான் சபாநாயகர் முன்பு ஆஜராகி இருக்கிறார்கள். சபாநாயகர் தகுதி நீக்கம் குறித்து கண்டிப்பாக முடிவெடுக்க வேண்டும். இந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதால் தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள்..” என கூறினார்
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள்,
கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது. நாளை கர்நாடக சட்டசபையில் நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது, கொள்ளாதது எம்.எல்.ஏக்களின் விருப்பம். ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு கால அவகாசம் எதையும் நிர்ணயிக்கவும் முடியாது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என உத்தரவிட்டனர்.