உ.பி.யில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட ஆர்எல்டி திட்டம்: இண்டியா கூட்டணிக்கு மேலும் சிக்கல்

உத்தரபிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி), பாஜகவுடன் இணைந்து போட்டியிடத் திட்டமிடுவதாகத் தெரிகிறது. இதன்மூலம், இண்டியா கூட்டணிக்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. உ.பி.யில் இண்டியா கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களாக சமாஜ்வாதி, ஆர்எல்டி ஆகிய கட்சிகள் உள்ளன. ஜாட் சமூக ஆதரவுகட்சியாகக் கருதப்படும் ஆர்எல்டியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி சிங். இவர் முன்னாள் துணைப் பிரதமர் சரண் சிங்கின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சரான மறைந்த அஜித் சிங்கின் மகனும் ஆவார். ஆர்எல்டி கட்சிக்கு மேற்கு உ.பி.யில் அதிகம் உள்ள ஜாட் சமூகத்தினரின் ஆதரவு உள்ளது. இந்த சமூகத்தினரில் முஸ்லிம் விவசாயிகளும் உள்ளனர்.
இவ்விருவரும், பஞ்சாயத்துக்களை கூட்டி ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் வழக்கம் கொண்டவர்கள். எனவே, ஆர்எல்டியுடன் இணைந்து போட்டியிடும் கட்சிக்கு அதிக பலன் கிடைக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில் ஆர்எல்டி, சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு இடையேதொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. ஆர்எல்டி கேட்டவாறு, கைரானா, பாக்பத், அம்ரோஹா, மதுரா ஆகிய தொகுதிகளை தருவதில் சமாஜ்வாதிக்கு பிரச்சினை இல்லை. ஆனால், முசாபர்நகர், ஹாத்ரஸ் ஆகிய தொகுதிகளை விட்டுத்தர சமாஜ்வாதிக்கு விருப்பம்இல்லை. முசாபர் நகரில் ஆர்எல்டிநிறுவனரான அஜீத் சிங் வெறும் 6 ஆயிரம் வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார். அதேபோல், கைரானா, முசாபர் நகர் மற்றும் பிஜ்னோர் தொகுதிகளில் போட்டியிடும் தம் வேட்பாளர்கள் ஆர்எல்டியின் சின்னத்தில் போட்டியிட சமாஜ்வாதி கேட்கிறது.
இந்த இழுபறியில், ஆர்எல்டியின் முக்கியத் தலைவர்கள் சிலர் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பில் ஆர்எல்டியின் உ.பி. முக்கிய எம்எல்ஏக்களும் கலந்து பங்கேற்றுள்ளனர். ஆர்எல்டிஉடனான கூட்டணியால் பாஜகவிற்கு மேற்கு உ.பி.யில் முஸ்லிம்களின் ஆதரவும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இத்துடன் மறைந்த முன்னாள் பிரதமர்சரண் சிங்கிற்கு பாரத் ரத்னாவிருதும், மக்களவை தேர்தலில் வென்றால் 2 மத்திய அமைச்சர் பதவிகளும் ஆர்எல்டி எதிர்பார்க்கிறது.
ஆர்எல்டியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரியின் தந்தை அஜித்சிங் கூட்டணி மாறுவதை வழக்கமாகக் கொண்டவர். மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுகளில் அவர் மாறி மாறி இடம்பெற்றுள்ளார். இரு கட்சியினரும் அஜித் சிங்கிற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கியிருந்தனர். இந்நிலையில் தந்தை வழியில் மகன் ஜெயந்தும் செல்ல முயல்வதாக தற்போது உ.பி.யில் சர்ச்சை கிளம்பியுள்ளது. எனினும் பாஜகவுடனான பேச்சுவார்த்தையை ஆர்எல்டியின் உ.பி. தலைவர் ரமாஷிஷ் ராய்மறுத்து, இண்டியா கூட்டணியில் தொடர்வதாக கூறியுள்ளார்.