கடந்த 14-ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். யாத்திரையின் 10-வது நாளான நேற்று அசாமின் குவாஹாட்டி நகருக்கு அவர் பாத யாத்திரையாக சென்றார். சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் சென்றனர்.அப்போது குவாஹாட்டி நகருக்குள் ராகுல் காந்தி நுழைய அசாம் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை காங்கிரஸார் அகற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “அசாம் மிகவும் அமைதியான மாநிலம். நக்சலைட் அணுகுமுறை எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரானது. ராகுல் காந்தி மக்களை தூண்டி விடுகிறார். வன்முறை தொடர்பான வீடியோவை காங்கிரஸாரே வெளியிட்டு உள்ளனர்.இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய அசாம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். காங்கிரஸாரின் வன்முறையால் குவாஹாட்டியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.ராகுல் காந்தி கூறும்போது, “குவாஹாட்டியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பஜ்ரங்தளம் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. எங்களது பாத யாத்திரைக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? நாங்கள் சட்டத்தை மீறவில்லை. சாலை தடுப்புகளை மட்டுமே அகற்றினோம்” என்று தெரிவித்தார்.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தையின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் திறமைகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அவர்கள் நம் நாட்டையும் சமுதாயத்தையும் சிறந்ததாக மாற்றுவார்கள். ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்வி கற்க, பா.ஜ., பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.