2023-ம் ஆண்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளோம். மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டம், உலகின் 5-வது மிகப்பெரியபொருளாதார நாடாக இந்தியாஉருவெடுத்தது, ஜி – 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது போன்றவற்றை கூறலாம். நிலவின் தென் துருவத்தில் முதல்முறையாக கால் பதித்த நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம். ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் மற்றும் ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தபோது ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் திளைத்தது.இவற்றின் வாயிலாக உலகளவில் பாரதத்தின் படைப்பாற்றல் பறைசாற்றப்பட்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்கள், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களை இந்தியா வென்றது. கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி அனைவரின் இதயங்களையும் கொள்ளையடித்தனர். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டி 20உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வெற்றிபெற்றது. அடுத்த கட்டமாக 2024-ம்ஆண்டு, பாரீஸ் ஒலிம்பிக்போட்டிக்காக இந்திய விளையாட்டு வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்திய சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா, என் மண், என் தேசம் போன்ற இயக்கம் ஆகியவை மிகப்பெரிய வெற்றி பெற்றன. நாடு முழுவதும் 70,000 அமுத நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன.
கடந்த 2015-ம் ஆண்டில் உலக புதுமைகள் படைத்தல் குறியீடு தரவரிசையில் இந்தியா 81-வது இடத்தில் இருந்தது. இன்று 40-வதுஇடத்துக்கு முன்னேறி உள்ளோம்.இந்த ஆண்டு பாரதம் விண்ணப்பித்திருக்கும் காப்புரிமைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஆசிய பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் இந்த முறை நமது பல்கலைக்கழகங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இந்த வெற்றிகளால், சாதனைகளால் நாம் உத்வேகம் பெற வேண்டும். பெருமிதம் கொள்ள வேண்டும். புதிய உறுதிமொழிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலில் வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் கவலை அளிக்கும் விஷயம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, ‘கட்டுடல் இந்தியா’ இயக்கம் தொடர்பான கருத்துகளை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதை ஏற்று ஏராளமான ஆலோசனைகள் வந்தன.
இந்தியாவின் முயற்சியால் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக இந்தத் துறையில் பணியாற்றும் ஸ்டார்ட் அப்நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தன. உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி மன நலனையும் பேணிக் காக்க வேண்டும். இந்த துறையிலும் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மக்களுக்கு சேவையாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மன நலனை பேணுவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
வேலு நாச்சியாருக்கு புகழாரம்: நமது பாரத பூமிக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு பெண்கள் பெருமிதம் சேர்த்து உள்ளனர். அவர்களில் சாவித்திரி பாய் ஃபுலே, ராணி வேலு நாச்சியார் குறிப்பிடத்தக்கவர்கள். ஜனவரி 3-ம் தேதி இருவரின் பிறந்த நாளை கொண்டாட உள்ளோம். பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் கல்விக்காக சாவித்திரிபாய் ஃபுலே குரல் எழுப்பினார்.
சுதந்திரப் போராட்ட தலைவர்களில் ராணி வேலு நாச்சியாரும் ஒருவர். தமிழ்நாட்டு மக்கள் இன்றும்கூட வீரமங்கை வேலு நாச்சியாரின் பெயரை நெஞ்சில் பதித்துப் போற்றி வருகின்றனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக ராணி வேலு நாச்சியார், வீரத்துடன் போராடினார், அவரது வீரம் இந்தியர்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. ஆங்கிலேயர்கள் சிவகங்கை சமஸ்தானத்தின் மீது போர் தொடுத்தபோது, அந்தப் பகுதியின் அரசராக விளங்கிய அவருடைய கணவர் கொலை செய்யப்பட்டார். ராணி வேலு நாச்சியாரும் அவருடைய மகளும் எதிரிகளிடமிருந்து தப்பினர். மருது சகோதரர்களோடு இணைந்து ஒரு படையை உருவாக்கிய வேலு நாச்சியார், பல ஆண்டுகள் அந்த படையை வலுப்படுத்தினார். பின்னர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீரமுடன் போர் புரிந்தார். முதன்முறையாக படையில் பெண்களுக்காக தனிப் பிரிவை ஏற்படுத்தியவர்கள் பட்டியலில் ராணி வேலு நாச்சியாரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் அவரை தலைவணங்கி போற்றுகிறேன் என்று மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.