ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை அளிக்கும்படி, கனடாவிடம் நம் நாட்டு துாதரக உயர் ஆணையர் சஞ்சய் குமார் வர்மா கேட்டுக் கொண்டுள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில் வசித்து வந்த, காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பின்னால் இந்திய அரசு இருப்பதாக குற்றஞ்சாட்டிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அடுக்கடுக்காக பல்வேறு புகார்களை தெரிவித்தார். இதை நம் நாட்டு அரசு உறுதியாக மறுத்தது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, கனடா மக்களுக்கு விசா வழங்குவதையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஆதாரத்தை கனடா இன்னும் அளிக்கவில்லை என, அந்நாட்டுக்கான இந்திய துாதரக உயர் ஆணையர் சஞ்சய் குமார் வர்மா நேற்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: விசாரணையில் கனடா அரசுக்கு உதவ தயாராக உள்ளோம். இந்த வழக்கில் தேவையான அல்லது பொருத்தமான ஆதாரங்கள் எதுவும் வழங்கப்பட வில்லை. இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே?
விசாரணையின் முடிவு எங்கே? நான் ஒருபடி மேலே சென்று, இப்போது விசாரணை ஏற்கனவே கறைபடிந்துவிட்டது என கூறுவேன். ஏனென்றால், அந்த கொலைக்கு பின்னணியில் இந்தியா அல்லது இந்திய ஏஜன்டுகள் உள்ளனர் என்று கனடா அரசின் உயர் மட்டத்தில் உள்ள ஒருவரே கூறி, இந்த வழக்கை திசை திருப்பி உள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் இதுவரை, 25க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு கனடா அரசு செவிசாய்க்கவில்லை. இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காண இரு நாட்டு அரசுகளும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றன