ஒரே நாடு ஒரே அடையாள அட்டை: நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தனித்துவ எண்

நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது போல நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த திட்டம், கடந்த 2020-ல் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்களின் அனுமதியும் அவசியமாக்கப்பட்டு உள்ளது. இந்த அட்டைக்கு அபார் (Automated Permanent Academic Account Registry-APAAR) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ‘ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அபார் அட்டையில் அந்த மாணவரின் கல்வி விவரங்களும், கூடுதல் திறமைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அபார் அட்டையின் அடிப்படை தகவல்கள் அவர்களின் ஆதார் தகவல்களில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். இது தொடர்பான அறிவிக்கை நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பெற்றோர்களை அழைத்துப் பேசி அனுமதி பெறும் நடவடிக்கையை தொடங்கும்படி அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதை ஏற்று அடையாள அட்டை பணியை பல மாநிலங்கள் தொடங்கியுள்ளன.

பள்ளிக் குழந்தைகளின் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் கோரி நாடு முழுவதிலும் சுமார் 40 லட்சம் பேர் மனு செய்துள்ளனர். மேலும், ஆதார் அட்டை இல்லாதவர்களே சுமார் 19 லட்சம் உள்ளனர். இதுபோன்ற காரணங்களால், அபார் அட்டைக்கான விவரங்களை பள்ளிகள் திரட்டுவதில் சிறிது தாமதம் ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய பள்ளிக் கல்வி அமைச்சக வட்டாரம் கூறும்போது, “இந்த அபார் அட்டைகளின் விவரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. இந்த விவரங்கள் அரசு நிறுவனங்கள் தவிர வேறு எவருக்கும் பகிரப்படாது என பெற்றோர்களிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டைக்காக பெற்றோர் அளித்த அனுமதியை எப்போது வேண்டுமாலும் வாபஸ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர். மத்திய அரசின் அபார் அட்டை திட்டத்துக்கு சில மாநிலங்கள் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. குறிப்பாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்கள், அபார் அட்டைக்கான பணிகளை தொடங்காமல் உள்ளதாக தெரிகிறது