வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு – பட்டாசு வெடித்து கிராம மக்கள் கொண்டாட்டம்

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 215 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டதை அறிந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில் நடந்த வன்கொடுமை வழக்கில் தருமபுரி நீதிமன்றம் 215 பேருக்கு சிறைத் தண்டனை விதித்தது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பி.வேல்முருகன், தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு வழக்கறிஞர் இளங்கோ கூறும்போது, “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், அதில் ரூ.5 லட்சத்தை அரசும், ரூ.5 லட்சத்தை பாலியல் வன்கொடுமை செய்தவர்களிடமிருந்து வசூலித்தும் தர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அப்போதைய தருமபுரி ஆட்சியர், எஸ்.பி., வன அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்” என்றார்.

இந்நிலையில், வாச்சாத்தி சம்பவத்தின் அடையாளமாக கருதப்படும் பிரம்மாண்ட ஆலமரத்தின் கீழ் கூடியிருந்த பாதிக்கப்பட்ட 18 பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வெளியானதும் மகிழ்ச்சி அடைந்தனர்.