பீஹாரில், ஐக்கிய ஜனதா தள மாநில செய்தித் தொடர்பாளரும், மேல்சபை உறுப்பினருமான ரன்பீர் நந்தன், பா.ஜ.,வில் சேரப்போவதாக தகவல் வெளியான நிலையில் அக்கட்சியின் தலைமை அவரை நீக்கியது. பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
ஐக்கிய ஜனதா தளத்தின் மாநில செய்தித் தொடர்பாளராகவும், மேல்சபை உறுப்பினராகவும் ரன்பீர் நந்தன் என்பவர் பதவி வகித்து வந்தார். இவர், 2013ல் பா.ஜ.,வில் இருந்து விலகி, ஐக்கிய ஜனதாதளத்தில் இணைந்தார். இந்நிலையில், மீண்டும் அவர் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் கசிந்தது. இதற்கு ஏற்ப, சமீபத்தில் நடந்த செய்தித் தொடர்பாளர்கள் கூட்டத்திலும் நந்தன் பங்கேற்கவில்லை. இதனால் அக்கட்சியின் தலைமை, அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தது.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் மாநில தலைவர் உமேஷ் சிங் குஷ்வாஹா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட ரன்பீர் நந்தன், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரன்பீர் நந்தன், ‘என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாதபோது, எந்த அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கி உள்ளீர்கள்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.