நன்னிலம் அருகே நெம்மேலி ஊராட்சியில் குழி தோண்டியபோது 14 உலோக சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட குச்சிப்பாளையம் கிராமத்தில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, அப்பகுதியில் நேற்று பொக்லைன் உதவியுடன் குழி தோண்டியபோது, 4 அடி பள்ளத்தில் பல உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.  இதுகுறித்த தகவலின்பேரில் நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன் மற்றும் போலீஸார் அங்கு சென்று, சிலைகளைப் பார்வையிட்டனர். இதில், நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர் ஆகிய சுவாமி சிலைகள் உட்பட 14 உலோக சிலைகள் இருந்தன. இதையடுத்து, அனைத்துசிலைகளும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து வட்டாட்சியர் ஜெகதீசன் கூறியபோது, “தொல்லியல் துறையினரின் ஆய்வுக்குப் பிறகே இந்த சிலைகளின் உண்மையான மதிப்பு தெரியவரும். அதன் பிறகு, அரசு வழிகாட்டுதலின்படி சிலைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும்” என்றார். வருவாய்த் துறையினர் மற்றும்போலீஸார் கூறியபோது, “இவை ஐம்பொன் சிலைகள் என்பதுஉறுதிசெய்யப்பட்டால், இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம்” என்றனர்.