கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8 மாதத்தில் 81 பேரும், கடந்த 7 நாட்களில் 6 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சளி, டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதில், குறிப்பாக சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோர் சிலர் கூறியதாவது: எங்கள் குழந்தைகள் தொடர் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறோம். இங்குள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன. பல குழந்தைகளுக்குக் காய்ச் சல் விட்டு விட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறியதாவது: தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ள குழந்தை களுக்கு டெங்கு பரிசோதனை செய்யப்படுகிறது. விட்டு, விட்டு பெய்யும் மழையால் டெங்கு, மலேரியா கொசுப்புழுக்கள் அதிகரித்துள்ளன. இதனால் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

கடந்த 8 மாதங்களில் 81 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 6 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் மழைக் காலங்களில் அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள், தங்கள் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப், உபயோகமற்ற பொருட்கள் மற்றும் டயர்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்குவதை தடுக்க அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நீரினால் பரவக் கூடிய நோய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

டெங்கு தடுப்பு நட வடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும். தூய்மைப் பணிகளைத் துரிதப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.