எதிர்க்கட்சிகள் சைவ ஆதீனங்களின் ஜாதியை விவாதத்திற்கு உள்ளாக்குவது வருத்தம் அளிக்கிறது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் கோயிலான புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நம் தேசத்திற்கு அர்ப்பணித்து உள்ளார். அதிகார பரிமாற்றத்தை குறிக்கும் செங்கோல், 1947ல் திருவாசகம் பாடல்கள் பாடப்பட்ட விழாவில், நேருவிடம் திருவாடுதுறை ஆதீனத்தால் ஒப்படைக்கப்பட்டது. ‘வாக்கிங் ஸ்டிக்காக’ தூக்கி எறியப்பட்ட அந்த செங்கோல், தமிழகத்தின் சைவ ஆதீனங்களின் ஆசிர்வாதத்தை பெற்ற பின், பிரதமர் மோடியால், சரியான இடத்திற்கு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. ஆங்கிலேயே கிழக்கிந்திய நிறுவனம், நம் நாட்டின் நாகரிக நெறிமுறைகளை அழிப்பதில் முனைந்திருந்த போது, சைவ ஆதீனங்கள் தமிழ் கையெழுத்து பிரதிகளை, குறிப்பாக சங்க காலத்தில் இருந்து சேமித்து பாதுகாப்பதில் பெருமளவில் பங்களித்தன. ஆதீனங்கள் இன்று வரை தமிழகம் முழுதும் உள்ள கோயில்களை நிர்வகிப்பதிலும், குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்குவதிலும், குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றனர். சைவ ஆதீனங்கள் ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் அல்ல. புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற, சைவ ஆதீனங்கள் சைவ வேளாளர், கற்காத்த வேளாளர், தொண்டை மண்டல சைவ வேளாளர், கொங்கு வேளாளர், பண்டாரம், நகரத்தார், ஆதி சைவர், அகமுடையார் ரத்தினகரர் என, அனைத்து சமூகத்தினரும் உள்ளனர். இந்த சமூகங்களில் சில, ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவை. எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தகுதியான எதையும் கண்டுபிடிக்கவில்லை என்பதும், தமிழகத்தின் அமைப்பை சரியாக புரிந்து கொள்ளாமல், சைவ ஆதீனங்களின் ஜாதியை விவாதத்திற்கு உள்ளாக்குவதும் வருத்தம் அளிக்கிறது. வடக்கே ராஜ தாண்டம் அல்லது தெற்கில் செங்கோல்; இரண்டுமே நீதியை குறிக்கும்” என கூறியுள்ளார்.