அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற பிரம்மாண்டமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், சமீபத்தில்தான் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நடந்து முடிந்தது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு அர்ச்சகர்கள் பூஜையை முடித்துவிட்டு கோயில் நடையை சாத்திவிட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம்போல் நடையை திறக்க வந்தபோது, கோயிலில் பொருட்கள் கலைந்து சிதறிக் கிடப்பதைக் கண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. மேலும்,  கோயில் உண்டியலை திருடர்கள் அசைத்துப் பார்த்துள்ளனர். அவிநாசிலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் பிரதான கருவறையில் லிங்கத்தின் மேல் உள்ள மிகவும் கனமான தாராபாத்திரத்தை திருடும் முயற்சியும் நடந்திருந்தது. ஆனால் அதை கழற்ற முடியாததால் தப்பித்தது. திருடர்கள் அந்த ஆத்திரத்தில், பிரதான கருவறையை சுற்றியுள்ள 63 நாயன்மார்களின் வஸ்திரங்களை கிழித்துப்போட்டு, சிறு கலசங்களை உடைத்துள்ளனர். சுப்பிரமணியர் சன்னதியில் வேல், சேவல் கொடி ஆகியவையும் களவாடப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து தகவலறிந்து வந்த அவிநாசி காவலர்கள், கோயிலில் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டன. இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அவிநாசி நகரின் மத்தியில் அமைந்திருக்கும் பிரபலமான கோயிலில் இந்தத் திருட்டு சம்பவம் நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.