மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், ஹிஜாப் அணிந்த ஒரு கல்லூரி பெண் ஹிந்து ஒருவருடன் பேசியதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்கள், ‘வேறு சமூகத்தைச் சேர்ந்த பையனுடன் ஏன் நடந்து செல்கிறாய்?’ என கேட்டு அந்த பெண்ணின் ஹிஜாபை பிடித்து இழுத்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, அதன் அண்டை மாநிலமான குஜராத்தில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், முஸ்லிம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த தனது பள்ளி தோழரிடம் ஹிஜாப் அணிந்த ஒரு ஒரு முஸ்லிம் பெண் பேசியதற்காக முஸ்லிம் கும்பல் ஒன்று அவரை துன்புறுத்தியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜுஹாபுராவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், ஒரு நபர் அந்த முஸ்லிம் பெண்ணிடம் உன் பெயர் என்ன, நீ ஏன் காஃபிரான அந்த ஹிந்து பையனிடம் பேசுகிறாய்? என கேட்டார். அதற்கு அந்த முஸ்லிம் பெண் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறியதையடுத்து, அந்த மனிதன் அந்த பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தினார். மேலும் ஹிந்து பையனை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.