தமிழகத்தில் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களின் போலி வீடியோவை தயாரித்துப் பகிர்ந்ததாகக் கூறப்படும் யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தியது ஏன் என்று தமிழக அரசிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இவ்வழக்கு சம்பந்தமாக, உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், காஷ்யப் வெறும் பத்திரிக்கையாளர் மட்டுமல்ல, சமூக ஊடகங்களில் 60 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களைக் கொண்ட பிரமுகர், தேர்தலில் போட்டியிட்டவர் என்றார். இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனீஷ் காஷ்யப்பிற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற காஷ்யப்பின் மனுவுக்கு மத்திய அரசு மற்றும் பிகார் மற்றும் தமிழக அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.