உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் அலிகர் சாலையில் உள்ள பி.எல்.எஸ் சர்வதேச பள்ளி என்ற ஒரு தனியார் பள்ளியின் முதல்வர் சோனியா மெக்பெர்சன், அந்த பள்ளியின் மாணவர்களை நமாஸ் செய்ய வற்புறுத்தியதாகக் கூறி பள்ளிக்கு வெளியே பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். பள்ளி வளாகத்திற்குள் தொழுகையின் போது ஹிந்து உட்பட மற்ற மாணவர்கள் தொழுகை நடத்தவும் மாணவிகள் பர்தா அணியவும் ஆசிரியர்களும் கல்லூரி முதல்வரும் கட்டாயப்படுத்தியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இததைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக ஹத்ராஸ் எஸ்.டி.எம் அசுதோஷ் குமார் கூறினார். பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட நீதிபதி அர்ச்சனா வர்மா விசாரணையைத் தொடங்கியுள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகம் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. “ஏப்ரல் 18 அன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, பாரதப் பண்டிகைகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக இசை, நடனம், நாடகம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டன. உலக பாரம்பரிய தினம் மற்றும் ஈத் என்ற கருப்பொருளில் இது நடைபெற்றது. அதில், சிவாஜி மகாராஜ், பாத்திமா ஷேக், ஜனநாயகத்தின் சின்னம், கதீட்ரல் தேவாலயம், தாஜ்மஹால், எலிபெண்டா குகைகள் போன்ற பாத்திரங்களை மாணவர்கள் ஏற்று, பாரம்பரியம் மற்றும் சிறந்த ஆளுமைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தினர். அவர்கள் அதில் பாடினர். ஆனால் ஒரு சிலர் இந்தப் பாடலின் பெயரை ‘ஃபாத்தியா’ அல்லது ‘நமாஸ்’ என்று கொடுத்து தவறான வதந்திகளைப் பரப்பிவிட்டனர். இதெல்லாம் பள்ளியின் நன்மதிப்பைக் கெடுக்கும் சிலரின் சதி” என கூறியுள்ளது.