பிரபலதாதா அத்திக் அகமது சுட்டுக் கொலை

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரபல மாஃபியா தலைவனும் நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர், பிரயாக்ராஜ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு  மருத்துவ பரிசோதனைக்காக காவலர்களால் அழைத்து வரப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மூன்று பேர் காவல்துறையிடம் சரண் அடைந்துள்ளதாக தகவல்.இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இருவரது கையிலும் விலங்கு பூட்டப்பட்டுகாவலர்களின் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்குள் அவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டபோது, அவர்களிடம் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சூழ்ந்தனர். செய்தியாளர்களை போல மைக், கேமரா என கூட்டத்தோடு கூட்டமாக அங்கு வந்த மூன்று பேர் திடீரென தங்கள் கைகளில் இருந்த துப்பாக்கியை கொண்டு அத்திக் அகமதுவையும் அஷ்ரப் அகமதுவையும் சுட்டுத் தள்ளினர். திடீரென துப்பாக்கி சூடு நடந்ததால் அங்கு குழுமியிருந்தவர்கள் பதற்றம் அடைந்து ஓடினர்.இந்தக் காட்சி நேரலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே,  கொலை செய்த உடனேயே கொலையாளிகள் மூவரும் காவலர்களிடம் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்தவர்களின் பெயர்கள் லாவ்லீன் திவாரி, அருண் மற்றும் சன்னி என கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு தினங்களுக்கு முன்னர்தான் அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். அத்திக் அகமது கொலை செய்யப்படும் காட்சியை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அத்திக் அகமது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1989 முதல் 2004 வரை 5 முறை எம்.எல்.ஏவாகவும், ஒருமுறை எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார். அவர் மீது 101 வழக்குகள் நிலுவையில் உள்ளன.அத்திக்கிற்கு அலி, உமர் அகமது, ஆசாத், அஹ்ஸான் மற்றும் அபான் என ஐந்து மகன்கள்.இதில் அவரது மகன் ஆசாத் அண்மையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.உமர் மற்றும் அலி ஆகியோர் சிறையில் உள்ளனர்.அஹ்ஸான் மற்றும் அபான் ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.அத்திக் அகமதுவின் மனைவிஷாயிஸ்தா பிரவீன் தலைமறைவாக உள்ளார்.