விரும்பத்தகாத தொழிலதிபர்களுடன் ராகுலுக்கு தொடர்பு

காங்கிரசில் இருந்து விலகிய சில முன்னாள் தலைவர்களைத் தாக்கியும் அவர்களை அதானி நிறுவனத்துடன் இணைத்தும் ராகுல் காந்தி டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டார். மலையாள செய்தி சேனல் ஏசியாநெட் நியூஸ் சேனலில், ராகுலின் இந்த டுவீட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், “ராகுல் உட்பட காந்தி குடும்பத்தினர் அனைவரும் ‘விரும்பத்தகாதவர்கள்’ என்று கருதப்படும் வணிகர்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். இதுபோன்ற தொழிலதிபர்களை ராகுல் எங்கு சென்று சந்திப்பார் என்பதற்கும் அவர்களை சந்திக்க அவர் மற்ற நாடுகளுக்குக்கூட செல்வார் என்பதற்கு குறைந்தபட்சம் 10 உதாரணங்களையாவது என்னால் தர முடியும்.  அவர்களது குடும்பம் முழுவதும் தொழிலதிபர்களுடன் தொடர்பு வைத்துள்ளது. அதில் ராகுல் காந்தியும் அடங்குவார். அந்த குடும்பத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” என தெரிவித்துள்ளார்.

ராகுலுக்காக ஒரு கொசு கூட அழவில்லை: “பாரதத்தில் காங்கிரஸ் கட்சி எங்குமே இல்லை, அதில் ஒரு சில நபர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். ராகுல் உள்ளிட்ட தற்போதைய காங்கிரஸ் தலைமைக்கு எங்குமே செல்வாக்கு இல்லை. பாரத் ஜோடோ யாத்ராவிற்குப் பிறகு ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று பலர் கூறுகிறார்கள். நாட்டில் உள்ள பலரைப் போலவே நானும் அந்த எண்ணத்தில் இருந்தேன். ஆனால் கடந்த 10 நாட்களில், அவருக்கு செல்வாக்கே இல்லை என்பதை உணர்ந்தேன். 1978ல் இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சிறைக்குச் சென்றனர். சிறையில் இடம் கிடைக்காததால், சிறைக்கு வெளியே பத்து லட்சம் பேர் காத்திருந்தனர். பத்தாயிரம் பேர் என்னுடன் சேர்ந்து, நாடாளுமன்றம் வரை கண்டன ஊர்வலம் நடத்தினர். இப்போது, ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, சிறை தண்டனை பெற்றார், எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால்  அதற்காக ஒரு கொசு கூட அழவில்லை, சாலையில் இறங்கி போராடவில்லை”.

இளைஞர்கள் தொடர் வெளியேற்றம்: அவர் டெல்லியில் இருந்து செயற்குழு உறுப்பினர்கள், டெல்லியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இதில், குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு இளைஞரோ அல்லது விவசாயியோ கூட அவர்களுடன் இணையவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் காங்கிரசின் தலைமையின் மீது 10 மடங்கு விரக்தியில் உள்ளனர். அதனால்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகினார். அனில் வெளியேறியது துரதிர்ஷ்டவசமானது. 50 வயதிற்குட்பட்ட பெரும்பாலான இளம் தலைவர்கள், ராகுலின் தலைமை மற்றும் வழிகாட்டுதல் இல்லாததால் காங்கிரசை விட்டு வெளியேறியுள்ளனர். இப்படி வெளியேறிய குறைந்தது நான்கைந்து டஜன் தலைவர்களையாவது ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் என்னால் காட்ட முடியும். வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் ராகுல் காந்தியின் அணியைச் சேர்ந்தவர்கள். அவர்கள். ராகுல் காந்தியிடமிருந்து தலைமை மற்றும் வழிகாட்டுதல் இல்லாததால் வெளியேறினார்” என்று ஆசாத் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.