பாகிஸ்தானின் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவில் வசித்து வந்தாலும், சிந்து மாகாணத்தில் தான் சற்று அதிகளவில் வசித்து வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தானில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள், சிறுமிகள், திருமணமான பெண்கள் ஆகியோர் முஸ்ளிம்களால் கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இதற்கு அரசியல் கட்சியினர், முஸ்லிம் பயங்கரவாதிகள், உள்லூர் ரௌடிகள் என அனைவரும் உடந்தையாக செயல்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும், எந்த நிவாரணமும் கிடைப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கேட்டும், மத மாற்றத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும், கராச்சி பிரஸ் கிளப் மற்றும் சிந்து சட்டசபை முன்பு ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பெண்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மத மாற்றத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வரும்படியும் பதாகைகள் ஏந்தியிருந்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.