மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மேற்குவங்க மாநிலத்தில், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகள் குறித்து இரண்டு நாள் போராட்டங்களை திருணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பா.ஜ.கவின் மேற்கு வங்கத் தலைவரான சுவேந்து அதிகாரி, ‘ஸ்ரீராம நவமி’ கொண்டாடப்படும் மார்ச் 30 அன்று மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்ததற்காக திருணாமுல் காங்கிரஸ் கட்சியை சாடினார். ‘சனாதன கலாச்சாரத்தில்’ நம்பிக்கை கொண்டவர்கள் பகவான் ஸ்ரீராமரின் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள் என்று கூறினார். அன்றைய தினம் விடுமுறை அறிவிப்பதற்குப் பதிலாக, ‘புனையப்பட்ட மற்றும் பொய்யான’ கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை அறிவித்துள்ளார் மமதா பானர்ஜி என குற்றம் சாட்டினார். மேலும், “மேற்கு வங்க மக்களுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்பு அட்டைகளை (ஜாப் கார்டு) வழங்குவதாகக்கூறி, மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணத்தை திருடும் ஊழலில் திருணமூல் தலைவர்கள் மற்றும் மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 3.6 கோடி வேலை வாய்ப்பு அட்டைகளை ஆதாருடன் இணைக்கும் முயற்சியைத் தொடர்ந்து மாநில அரசு வழங்கிய இந்த அட்டைகள் போலியானது என்று கண்டறியப்பட்டது. இது ஒரு பெரிய ஊழல். இதில் சி.பி.ஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளேன். 2011ல் மமதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது மாநிலத்தின் கடன் நிலுவைத் தொகை ரூ. 2 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது ரூ. 6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட படித்த வேலையில்லாதோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 கோடியில் இருந்து இரு மடங்காக உயர்ந்துவிட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒன்பது மடங்கு அதிகரித்து 45 லட்சத்தை தாண்டியுள்ளது, இடதுசாரிகள் ஆளும் கேரளாவைத் தவிர, ஜி.எஸ்டி பங்கின் தணிக்கையை சமர்ப்பிக்காத ஒரே மாநிலம் மேற்கு வங்காளம் தான். திருணமூல் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு தனியார் லிமிடெட் நிறுவனம்’. மாநிலத்தில் மிகப்பெரிய ஊழல்களிலும் குடும்ப ஆட்சியிலும் திருணமூல் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி அதனை மாநில அரசின் திட்டங்களாக காட்டிக்கொள்ளும் ஸ்டிக்கர் ஒட்டும் திட்டத்தை மமதா அரசு மேற்கொண்டு வருகிறது” என அவர் குற்றம் சாட்டினார்.